மகாராஷ்டிராவின் புனேவில் 65 வயது முதியவரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை நசுக்கி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் வரை எந்த அரசியல்வாதியும் தனது வீட்டிற்கு வரக்கூடாது என்று சிறுமியின் தந்தை வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “என் மகளுக்கு நீதி கிடைத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை, எந்த அரசியல் தலைவரும் எங்களைச் சந்திக்க வரக்கூடாது என்பதுதான் எனக்கும், என் குடும்பத்திற்கும் உள்ள ஒரே ஒரு விருப்பம்” என தெரிவித்துள்ளார்.
புனே மாவட்டத்தின் நஸ்ராபூர் பகுதியில் மே 1ம் தேதி, 3 வயது சிறுமியை உணவுத் தருவதாக கூறி, மாட்டு கொட்டகை ஒன்றிற்கு அழைத்து சென்ற 65 வயது முதியவர், அக்குழந்தையை பாலியல் வன்கொடுமை சென்று, பின்பு கல்லால் அடித்துக் கொன்றுள்ளார். குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.