மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்யும் E20 கொள்கையை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
மத்திய அரசின் E20 எரிபொருள் கொள்கை மற்றும் சர்க்கரை விலை உயர்வுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற பிரபல அரசியல் விமர்சகரும் சமூக ஆர்வலருமான தெஹ்சீன் பூனாவாலா, டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவுகளும் காணொலிகளும் தற்போது தேசிய அளவில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளன.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள E20 கொள்கை (20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல்) சாதாரண மக்களின் வாகனங்களை பாழாக்குவதாகவும், வீட்டு பட்ஜெட்டைப் பாதிப்பதாகவும் பூனாவாலா குற்றம் சாட்டியுள்ளார். "சர்க்கரை தாதா பயப்படும் போதெல்லாம் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" எனக் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் தொழிலதிபர்களும் லாபம் அடைவதற்காகவே இந்த எத்தனால் கொள்கை மற்றும் சர்க்கரை விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக "சர்க்கரை ஊழல்" என்ற பெயரில் காரசாரமாக விமர்சித்துள்ளார். தங்கள் "டீம் பாரத்" அமைப்பு சார்பில் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த முயன்ற போது, காவல்துறையினர் தங்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து காவலில் வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தின் போது, தன் வீட்டின் வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த டெல்லி காவல் துறையினருக்கு தெஹ்சீன் பூனாவாலா கரும்புச் சாறு வழங்கிய காணொலி இணையத்தில் வைரலானது. கரும்புச் சாறை வழங்கிப் பேசிய அவர், "சர்க்கரை மற்றும் கரும்பின் விலை தங்கம் போல் உயர்ந்து வருகிறது, எதிர்காலத்தில் கரும்புச் சாறு குடிப்பதும் ஒரு ஆடம்பரமாகிவிடும்" என்று கிண்டலாக கூறி அரசாங்கத்தின் கொள்கைகளுக்குத் தன் எதிர்ப்பை பதிவு செய்தார். டெல்லி காவல்துறையினர் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக்காட்டி, போராட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவரைத் தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்யும் E20 கொள்கையை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஆனால் பழைய வாகன உரிமையாளர்கள், இந்த E20 எரிபொருளால் வாகன என்ஜின்கள் பழுதடைவதாகவும், வாகனத்தின் மைலேஜ் குறைவதாகவும் கவலை தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கு 100% தூய்மையான பெட்ரோல் (E0), E5 அல்லது E10 ஆகியவற்றை தேர்வு செய்யும் உரிமையை அரசு வழங்க வேண்டும் என பூனாவாலா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். டெல்லி காவல்துறையுடனான இந்தத் தொடர் மோதல், E20 எரிபொருள் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.