இந்தியா

காங்கிரஸிற்கு எதிரானப் போராட்டம் - டிஆர்எஸ் தலைவர் கவிதா குண்டுக்கட்டாக கைது!

அரசு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என கவிதா எச்சரிக்கை.

தெலங்கானா ரக்‌ஷனா சேனா கட்சியின் தலைவர் கவிதா போடுப்பல் பகுதியில் நடைபெற்ற நில உரிமைப் போராட்டத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், தெலங்கானா இயக்க ஆதரவாளர்களை காவல்துறை கைது செய்ததைத் தொடர்ந்து, கவிதா காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தெலங்கானா தனி மாநில உருவாக்கப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளுக்கு காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்தபடி, தலா 250 சதுர அடி நிலம் வழங்கக் கோரி உப்பல் தொகுதிக்குட்பட்ட போடுப்பல் பகுதியில் கவிதா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டக் களத்தில் ரேவந்த் ரெட்டியின் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டு, பதற்றம் நிலவியதை அடுத்து, கவிதா மற்றும் அவரது கட்சித் தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கவிதா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பொல்லாரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மட்டுமே தாங்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அப்படி வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் மக்கள்மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அரசு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும், காங்கிரஸ் அரசுக்கான கவுண்ட்டன் தொடங்கிவிட்டது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.