பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகச் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டார்.
இந்தப் பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி, இந்தியா-உஸ்பெகிஸ்தான் மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
அங்கு இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் செல்கிறார்.
புறப்படுவதற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாயப் பங்களிப்பை வலுப்படுத்துவதிலும், அப்பகுதியுடனான உறவுகளை ஆழப்படுத்துவதிலும் இந்தப் பயணம் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
"வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும், நமது 'வளர்ச்சியடைந்த இந்தியா' மற்றும் 'புதிய உஸ்பெகிஸ்தான்' என்ற பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்தும் அதிபர் மிர்சியோயேவுடனான எனது பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்வது இது நான்காவது முறையாகும். தாஷ்கண்ட் மாநிலக் கிழக்கத்திய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி நினைவிடம் மற்றும் மகாத்மா காந்தி மையத்திற்கும் பிரதமர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
தாஷ்கண்டில் இருந்து, கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவின் அழைப்பின் பேரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அமைப்பின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் 26வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி பிஷ்கேக் செல்வார்.
இந்தியா 2017 முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு மற்றும் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறது.
பிஷ்கேக்கில் நடைபெறும் இந்த இரண்டு நாள் உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.