இந்தியா

டி.என்.ஏ. சோதனைக்கு வற்புறுத்தியதால் கர்ப்பிணி தற்கொலை - கணவர், மாமியார் கைது

சுஷ்மிதா கர்ப்பமானார். ஆனால் அவரது நடத்தையில் அபிலாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள கடி பெத்தபூர் கிராமத்தை சேர்ந்தவர் அபிலாஷ். இவருடைய மனைவி சுஷ்மிதா.இவர்களுக்கு கடந்த 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த தொடங்கினர்.

இந்த நிலையில் சுஷ்மிதா கர்ப்பமானார். ஆனால் அவரது நடத்தையில் அபிலாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தை யார் என்று நிரூபிக்க வேண்டும். வயிற்றில் இருக்கும்போதே குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என கொடுமைப்படுத்த தொடங்கினார்.

நாளுக்கு நாள் அவருடைய சித்ரவதை அதிரித்தது. இதனால் மனமுடைந்த சுஷ்மிதா தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சுஷ்மிதாவின் தாயார் ஜனாபாய் என்பவர் அங்குள்ள போலீசில் புகார் அளித்தார். போலீசார் சுஷ்மிதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனது மகளை கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஜனா பாய் குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து அபிலாஷ் மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என சித்ரவதை செய்ததால் சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷ் மற்றும் அவரது தாயாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.