இந்தியா

டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று- பிரதமர் மோடி புகழஞ்சலி

ஒரே நாடு கொள்கைக்காக உயிர் தியாகம் செய்த தேசபக்தர்.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழ் அஞ்சலி செலுத்தினார்.

யார் இவர்?

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி இந்தியாவின் முதல் தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் ஒரு சிறந்த கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

கொல்கத்தாவில் பிறந்த இவர், பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் சட்டப்படிப்பு பயின்று, லண்டன் லிங்கன்ஸ் இன் நிறுவனத்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். தனது 33-வது வயதிலேயே கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயது துணைவேந்தராக 1934-ல் நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து கல்வி சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

ஒரே நாடு கொள்கை:

பின்னர் 1947-ல் அமைக்கப்பட்ட ஜவஹர்லால் நேருவின் முதல்-அமைச்சரவையில் தொழில் மற்றும் வழங்கல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின் 1950-ல் பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட 'நேரு-லியாகத் ஒப்பந்தத்தை' எதிர்த்து தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.

பின் 1951 அக்டோபர் 21 அன்று பாரதிய ஜனசங்கம் என்ற கட்சியைத் தோற்றுவித்தார். இதுவே இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியாகும்.

"ஒரே நாட்டில் இரண்டு அரசியல் சாசனங்கள், இரண்டு பிரதமர்கள், இரண்டு கொடிகள் இருக்கக்கூடாது" என ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை (சட்டப்பிரிவு 370) கடுமையாக எதிர்த்தார்.

காஷ்மீருக்குள் நுழைய இந்தியர்களுக்குத் தேவைப்பட்ட அனுமதிச் சீட்டு முறையை எதிர்த்து அங்கு சென்றபோது கைது செய்யப்பட்டு, சிறையிலேயே மாரடைப்பால் காலமானார்.

அவரது தியாகத்தின் காரணமாகவே காஷ்மீருக்கான அனுமதிச் சீட்டு முறை ஒழிக்கப்பட்டு, இந்தியாவின் முழுமையான ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கப்பட்டது.

பிரதமர் மோடி புகழ் அஞ்சலி:

தேசத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அவரின் தியாகத்தை நினைவு கூர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் புகழ் அஞ்சலி செலுத்தினார்.

அவர் கூறுகையில், இன்று, பிரிக்கப்படாத இந்தியாவின் முன்னோடியும், தீவிர தேசபக்தரும், மாபெரும் கல்வியாளருமான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 125வது பிறந்தநாளை தேசம் கொண்டாடுகிறது.

வலிமையான மற்றும் தற்சார்புடைய இந்தியா குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதிக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT