தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டத்தை கொண்டுவருவதற்கான அரசின் முடிவை அறிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட காணொளிக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய புதிய மசோதா ஒன்று, அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அந்த காணொளி செய்தியில் மோடி குறிப்பிட்டார்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் அறிவித்த மசோதாவின் வரைவுக்கு, வெள்ளிக்கிழமையன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
"நண்பர்களே, நன்றி. நள்ளிரவில் உங்களுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது காணொளிக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு தொடர்ந்து கிடைக்கட்டும்; நம்மிடையேயான உறவு மேலும் வலுப்பெறட்டும். நன்றி, நன்றி நண்பர்களே," என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட புதிய காணொளி செய்தியில் அவர் கூறினார்.
24 மணி நேரத்தில் ஒரு 'ரீல்' காணொளிக்கு அதிகபட்ச பார்வைகளைப் பெற்றதன் மூலம் மோடி புதிய உலக சாதனை படைத்துள்ளார்; இதுவரை இக்காணொளி 303 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய சாதனை 300 மில்லியன் பார்வைகளாக இருந்தது.
தேர்வு தொடர்பான முறைகேடுகள் புகாரை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தலைமையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 'சான்சத் சலோ' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு நாட்களுக்கு பிறகு, மோடி இந்த காணொளியை வெளியிட்டார்.