சேவை மனப்பான்மையை நேரடியாகக் கடைக்கோடி மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், வத் நகரில் இருந்து வாரணாசி வரை பல்வேறு நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக நடைபெற்று வரும் 'சேவா யாத்ரா' எனும் இருசக்கர வாகன பேரணியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) கலந்துரையாடுகிறார்.
இந்த பேரணியானது சேவை, மக்களுடனான தொடர்பு, இளைஞர்களின் பங்கேற்பு, சமூக நலன், கலாச்சார இணைப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பொது ஈடுபாட்டின் பல்வேறு பரிமாணங்களை ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்கிறது. 10 குழுக்களாக பயணிக்கும் இந்த பேரணியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் இன்று காலை கலந்துரையாடுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடியின் 76-ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று இரண்டு இருசக்கர வாகன பேரணிகள் தொடங்கி வைக்கப்பட்டன; ஒன்று பிரதமரின் பிறந்த இடமான வத் நகரில் இருந்து (குஜராத்) அவரது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி வரையிலும், மற்றொன்று வாரணாசியில் இருந்து வத்நகர் வரையிலும் நடைபெறுகின்றன. இவை அக்டோபர் 7-ஆம் தேதி நிறைவடையும்.
மோடியின் 25 ஆண்டுகால பொது சேவையை குறிக்கும் வகையில் இந்த பேரணிகள் நடத்தப்படுகின்றன. இந்த பேரணிகளில் பங்கேற்பாளர்கள் வெறும் சமூகங்கள் வழியாக கடந்து செல்வது மட்டுமல்லாமல், மக்களை சந்தித்து, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.
நலத்திட்டங்கள் மற்றும் அதிகாரமளித்தல் திட்டங்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துகொள்ள, அத்திட்டங்களின் பயனாளிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் கலந்துரையாடுவது இந்த பேரணிகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
பங்கேற்பாளர்கள் வெறும் இருசக்கர வாகன பேரணியை விடவும் மேலான ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வத்நகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர்.