இந்தியா

2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் - பிரதமர் மோடி

பா.ஜ.க., கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குதல், தன்னிறைவு மற்றும் இந்தியாவை உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றுதல் ஆகியவை முழக்கமாக இருக்கும். உலகளாவிய உற்பத்தி மையம், ஒலிம்பிக் போட்டிகள் நடத்துதல் ஆகியவையும் இலக்காக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

குஜராத் முதல்-மந்திரி, நாட்டின் பிரதமர் என அரசியல் தலைவராக பிரதமர் மோடி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவரது தலைமையை பாராட்டி மத்திய மந்திரிசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடி

பொதுச் சேவையில் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பிரதமர் மோடி இன்று இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சேவா ஜோதி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அவருக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

என் மீதான நம்பிக்கைக்கு இந்திய மக்களிடம் தலை வணங்குகிறேன். என்னை பொறுத்தவரை மக்களே கடவுள். கடினமாக உழைக்கும் பா.ஜ.க. தொண்டர்களே எனது பலம். சிறுவயது முதலே புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்தது. இப்போதும் நான் ஒரு மாணவனாகவே இருக்கிறேன்.

சாதனையை நினைக்கவில்லை

2001 அக்டோபர் 7-ந்தேதி குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது இந்த மைல்கல்லை (சாதனை) எட்டுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இன்று அரசாங்க தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளேன். மக்களே எனக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்து தேர்ந்து எடுத்தனர்.

மக்களின் பங்களிப்பு

பா.ஜ.க., கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் எங்கிருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் மக்களின் பங்களிப்பே அதில் மிக முக்கியமானது. இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அதன் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் என் மீது முதன்மையான உரிமை உண்டு. நான் ஒரு போதும் தனிமையாக உணர்ந்தது இல்லை. இந்தியாவின் கலாச்சார ஆன்மாவை காக்கும் எண்ணற்ற தன்னார்வலர்கள் உள்ளனர்.

வலிமை

இன்று காலை நான் விநாயகர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தேன். நாட்டிற்காகவும், 140 கோடி மக்களுக்காகவும், எனக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். எனது நாட்டிற்காக இன்னும் அதிக ஆற்றலுடன் பணியாற்றுவதற்கான வலிமையையும், திறனையும் இறைவன் எனக்கு அருள வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாக இருந்தது.

நலன் விரும்பிகள் என்னை ஊக்கப்படுத்தினர். விமர்சகர்கள் என்னை எனக்குள்ளேயே திரும்பி பார்க்க கற்றுக் கொடுத்தனர். எனக்கு ஆதரவாக நின்றவர்கள் நம்பிக்கையின் சக்தியை எனக்கு காட்டினர். என்னை எதிர்த்தவர்கள் ஜனநாயகத்தின் சக்தியை எனக்கு கற்றுக் கொடுத்தனர்.

வளர்ந்த இந்தியா

முன்பு கொள்கை முடக்கம் பற்றிய பேச்சு இருந்தது. இப்போது மக்கள் சீர்திருத்த வேகம் பற்றி பேசுகிறார்கள். இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல அனைவரின் முயற்சியும், உற்சாகமும் தேவை.

2047-க்குள் வளர்ந்த இந்தியாவை (விக்சித் பாரத்) உருவாக்குதல், தன்னிறைவு மற்றும் இந்தியாவை உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றுதல் ஆகியவை முழக்கமாக இருக்கும். உலகளாவிய உற்பத்தி மையம், ஒலிம்பிக் போட்டிகள் நடத்துதல் ஆகியவையும் இலக்காக இருக்கும்.

உயரிய நோக்கம்

நான் எனது தனிப்பட்ட லட்சியத்திற்காக அல்லாமல் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே வாழ்ந்து வருபவன். அரசாங்க தலைவராக 25 ஆண்டுகால பயணத்தை மக்கள் ஒரு சாதனையாக பார்க்கிறார்கள். ஆனால் நான் இதை எப்படி பார்க்கிறேன் என்றால் என்னை பொறுத்தவரை இது தனிப்பட்ட பெருமைக்கான விஷயமோ அல்லது அதற்கான தருணமோ அல்ல.

பா.ஜ.க.

25 ஆண்டுகளுக்கு முன்பு எனது 50-வது வயதில் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சேவை செய்வதிலும், மலைப் பகுதிகளில் வாழ்வதிலும் எனது நேரத்தை செலவிட்டு இருந்தேன். இறுதியில் பா.ஜ.க.வில் அமைப்பு ரீதியாக பணிகளை மேற்கொள்ளும் பாதையை தேர்ந்தெடுத்தேன். எனது அரசியல் செயல்பாட்டு பதிவேடு ஒரு கட்சி தொண்டனின் பணிகளை மட்டுமே பிரதிபலித்தது.

இந்திய விமானி

உலகம் இந்திய விமானிகள் பற்றி பேசுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் பற்றி உலகம் பேசும் காலம் வரும். தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கைகளை வகுப்பதோடு, அதற்கேற்ற தீவிர உழைப்பையும் அளித்தால் மட்டுமே இத்தகைய இலக்குகளை அடைய முடியும்.

சவால்கள்

இது ஓய்வெடுப்பதற்கான நேரம் அல்ல. மாறாக மிகுந்த உற்சாகத்துடன் முன்னேறி சென்று நம்மை முழுமையாக நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். அதை நாங்கள் செய்து முடிப்போம். இந்தியா சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் நம்மிடம் 140 கோடி தீர்வுகளும் உள்ளன.

வாக்கு வங்கி

வாக்கு வங்கி அரசியலின் அடிப்படையில் சமூகம் பிளவுப்பட்டு இருப்பது நாடு எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று. ஆனால் ஒரு விவசாயியின் வயலில் தண்ணீர் இல்லாதபோது அந்த பிரச்சனை ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் பாதிக்கிறதா? மின்சாரம் இல்லாதபோது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் இருள் சூழ்ந்து கொள்கிறதா? இல்லை என்பதே அதற்கான பதில். பிரச்சனை அனைவருக்கும் பொதுவானது என்றால் அதற்கான தீர்வும் அனைவருக்கும் உரியதாகவே இருக்க வேண்டும்.

சாதிப்போம்

100 ஆண்டுகளுக்கு முன்பு நாம் 40 கோடிக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தோம். இன்று நாம் 140 கோடிக்கும் அதிகமானோர் இருக்கிறோம். 140 கோடி மக்களும் இணைந்து 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம். நிச்சயமாக அதை செய்வோம். இதை நாம் சாதிப்போம். விண்வெளி பயணம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நாம் சாதிப்போம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT