தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா வயோதிகம் மற்றும உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84.
முதலமைச்சர் விஜய், பாரதிராஜா வீட்டுக்கு நேரில் வந்து அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் 'திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பை போற்றி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்' என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். தொடர்ந்து அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து, சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகேயுள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பாரதிராஜாவின் உடலுக்கு உறவினர்கள், ஊர்க்காரர்கள், ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் பாரதிராஜா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வியலை பாரதிராஜாவை போல எடுத்துக்காட்டியவர் வேறு யாருமில்லை.
தமிழ் சினிமாவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றவர் இயக்குநர் பாரதிராஜா.
தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய பாரதிராஜா, திரையுலகின் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர்.
பாரதிராஜாவை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவர் பதிவிட்டுள்ளார்.