சொந்த ஊரில் பாரதிராஜா உடல் - அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்

அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
Bharathiraja
Published on

தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா வயோதிகம் மற்றும உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84.

16 வயதினிலே' திரைப்படம் மூலம் இயக்குனராக தடம் பதித்த பாரதிராஜா, அரங்கிற்குள் நடைபெற்று வந்த சினிமா படப்பிடிப்பை கிராமத்துக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

'சிவப்பு ரோஜாக்கள்', 'கிழக்கு சீமையிலே', 'முதல் மரியாதை', 'வேதம் புதிது' என தனது படைப்புகளால் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்தவர்.

பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா. இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் இருந்தனர். இதில் மனோஜ் சில படங்களில் நடித்தார். உடல்நலக்குறைவால் மனோஜ் கடந்த ஆண்டு உயிரிழந்தார். மகன் மறைவுக்கு பிறகு மனமுடைந்து போயிருந்த பாரதிராஜா, மலேசியாவில் உள்ள மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வில் இருந்து வந்தார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார்.

அதிர்ச்சியும், சோகமும்

சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய பாரதிராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாச பிரச்சனையால் அவதிப்பட்ட அவர் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நிலை ஓரளவு தேறியதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை நீலாங்கரை இல்லத்திலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகளும் பெற்று வந்தார்.

இந்தநிலையில் வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். பாரதிராஜா மறைவு செய்தி திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

முதலமைச்சர் அஞ்சலி

இந்த தகவல் அறிந்த, அவரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவரும். முன்னணி நடிகையுமான ராதிகா, இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் பாரதிராஜா இல்லத்துக்கு வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

முதலமைச்சர் விஜய், பாரதிராஜா வீட்டுக்கு நேரில் வந்து அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ் சலி செலுத்தினார். அப்போது பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கும், ராதிகா உள்ளிட்டோருக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

மேலும் 'திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பை போற்றி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகை யில் அவரது இறுதி பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்' என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். தொடர்ந்து அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பாரதிராஜாவின் உடல் நேற்று இரவு 9 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது.

தேனியில் உடல் அடக்கம்

இந்நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகேயுள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பாரதிராஜாவின் உடலுக்கு உறவினர்கள், ஊர்க்காரர்கள், ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை சுஹாசினி அவரது மனைவியை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

இன்று அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com