இந்தியா

திறன் கொண்ட பணியாளர்களின் வேலைகளை செயற்கை நுண்ணறிவால் பறிக்க முடியாது: பிரதமர் மோடி

இன்று உலக நாடுகள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளை விட ஐடிஐ பயிற்சி பெற்ற திறமையான பணியாளர்களையே அதிகம் நாடுவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவிற்கு வந்த படையெடுப்பாளர்கள் முதலில் தாக்கியது நமது திறன்களையே என்றும், கைவினைஞர்களின் திறமைகளால் இந்தியா செழிப்புடன் இருந்ததைக் கண்டு அவர்களின் கட்டைவிரல்களைத் துண்டித்து அழிக்க முயன்றதாகவும் மோடி சுட்டிக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், திறன் கொண்ட பணியாளர்களின் வாழ்வாதாரத்தை யாராலும் பறிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டானில் நடைபெற்ற ஐந்தாவது 'கௌஷல் தீக்‌ஷாந்த் சமாரோ' (தேசியத் திறன் பட்டமளிப்பு விழா) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், காலம் மாறி வருவதாகவும், வெறும் காகிதச் சான்றிதழ்களைக் கொண்டிருப்பவர்களை விடத் திறன் கொண்டவர்களுக்கே இனி அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்றும் கூறினார்.

இந்தியா தற்போது உலகின் திறன் தலைநகராக மாறுவதை நோக்கி முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஐஐடி மாணவர்களுக்கு இணையாக ஐடிஐ மாணவர்களும் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐஐடி ஆக இருந்தாலும் சரி, ஐடிஐ ஆக இருந்தாலும் சரி, மாணவர்களே நாட்டின் செல்வம், பலம் மற்றும் எதிர்காலம் என்றும், கடந்த பத்தாண்டுகளில் சுமார் 5,000 புதிய ஐடிஐ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு உற்பத்தி

இந்தியாவிற்கு வந்த படையெடுப்பாளர்கள் முதலில் தாக்கியது நமது திறன்களையே என்றும், கைவினைஞர்களின் திறமைகளால் இந்தியா செழிப்புடன் இருந்ததைக் கண்டு அவர்களின் கட்டைவிரல்களைத் துண்டித்து அழிக்க முயன்றதாகவும் மோடி சுட்டிக்காட்டினார். ஆங்கிலேயர்கள் மிகவும் தந்திரமான முறைகளைப் பின்பற்றி, மெக்காலே கொண்டு வந்த கல்வி முறையின் மூலம் திறன் சார்ந்த கல்வியை எழுத்தாளர்களை உருவாக்கும் அமைப்பாக மாற்றியதாகவும், சுதந்திரத்திற்குப் பிறகும் தொழில் பயிற்சிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

ஒரு காலத்தில் கைபேசிகளை இறக்குமதி செய்து வந்த இந்தியா, இன்று நாட்டின் பெண்கள் மூலம் அவற்றைத் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகப் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் குறைக்கடத்தி ஆலை மற்றும் பிரமோஸ் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும், மாநிலத்தில் 17 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதையும் நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.

2027 உலகத் திறன் போட்டி

சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நவீன நகரங்கள் உருவாக இந்தியத் தொழிலாளர்களின் கடின உழைப்பே முக்கியக் காரணம் என்று அந்நாட்டு அரச குடும்பத்தினர் தன்னிடம் கூறியுள்ளதாக மோடி குறிப்பிட்டார். இன்று உலக நாடுகள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளை விட ஐடிஐ பயிற்சி பெற்ற திறமையான பணியாளர்களையே அதிகம் நாடுவதாகவும் அவர் கூறினார். உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 2027-ம் ஆண்டில் உலகத் திறன் போட்டியை இந்தியா நடத்தும் என்றும் பிரதமர் அறிவித்தார். இளைஞர்கள் பெரிய கனவுகளைக் கண்டு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் பயணத்தில் அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT