

இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் உள்ள மிட்டாய் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் உள்ள மிட்டாய் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் காணவில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவிற்கு மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செராங் மாவட்டத்தின் சிகாண்டே பகுதியில் அமைந்துள்ள தொழில்துறை வளாகத்தில் நேற்று இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மிட்டாய் மற்றும் சர்க்கரைப் பொருட்கள் தயாரிக்கும் 'ஃபோனுசா அகுங் முலியா' தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் முதல் இரவுக்குள் தீ பரவியதாகவும், இரவு நேரக் காட்சிகளில் கட்டிடத்தின் ஒரு பகுதி தீயில் எரிந்து கூரை இடிந்து விழுந்திருப்பதும் தெரியவந்துள்ளது. சுமார் 40 ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அந்நிறுவனம் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததாகப் பான்டென் மாகாணக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், தொழிற்சாலையின் சில பகுதிகளில் தீ எரிந்து கொண்டிருப்பதால் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் சிக்கல் நீடிப்பதாகவும் மீட்பு அதிகாரி ரிஸ்கி டுவியாண்டோ தெரிவித்துள்ளார். களத்தில் பணியாற்றும் மீட்புக் குழுவினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கூட்டுத் தேடல் மற்றும் மீட்புப் படை அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார். காணாமல் போன ஊழியர்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்துத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், அது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, காணாமல் போனவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.