இந்தியா

புது ரெயில்வே திட்டங்கள் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்தும் - பிரதமர் மோடி

இந்தத் திட்டங்கள் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்தும்.

பீகாரில் நான்கு ரெயில்வே திட்டங்கள் மற்றும் நான்கு வழி நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மேலும், இந்த முயற்சிகள் போக்குவரத்து இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ஆந்திர பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

எக்ஸ் தள பதிவு:

இது குறித்த எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி, "இந்திய ரெயில்வே நெட்வொர்க்கிற்கு முக்கியமான திறனை சேர்த்து, லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்துதல், நெரிசலை குறைத்தல், சிறந்த இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற பல நன்மைகளை கொண்டிருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பீகாரின் முழுமையான வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு, இணைப்பு வசதிகளை விரைவாக விரிவுபடுத்துவது முற்றிலும் அவசியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்த திசையில், தேசிய நெடுஞ்சாலை 22-இன் முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க இன்று எங்கள் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலம் முழுவதற்கும் உயிர்நாடியாக அமையவிருக்கும் இந்த திட்டம், முன்னேற்றத்தின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்க உள்ளது. இது பயண நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாவையும் மேம்படுத்தும், என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, சுமார் ரூ. 9,450 கோடி மொத்த மதிப்பிலான ரயில்வே அமைச்சகத்தின் நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.

திட்ட விவரங்கள்:

இந்தத் திட்டங்களில், மேற்கு வங்கத்தின் கரக்பூருக்கும் ஒடிசாவின் பத்ரக் பகுதிக்கும் இடையே 173 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்காவது வழித்தடம் அமைப்பதும், பத்ரக்கிற்கும் ஒடிசாவின் ஹரிதாஸ்பூருக்கும் இடையே 75 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்காவது வழித்தடம் அமைப்பதும் அடங்கும்.

பீகாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 22-இன் முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா பகுதியை ரூ. 3,590.73 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முசாஃபர்பூர்-சீதாமர்ஹி-சோன்பர்சா வழித்தடமானது, தேசிய சரக்குப் போக்குவரத்து கட்டமைப்புடன் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதோடு, குறிப்பிடத்தக்க மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.