பிரதமர் மோடி கடந்த 2025-ம் ஆண்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்த பயணச்செலவு ரூ.187 கோடி என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவினம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அவற்றுக்கான ஆண்டு செலவின விவரங்களை சஞ்சய் சிங், சிவதாசன் ஆகிய எம்.பி.க்கள் கேட்டிருந்தனர்.
உறுப்பினர்களின் இந்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கரீட்டா எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் பிரதமரின் வெளிநாட்டு பயனா விவரங்கள் மற்றும் அவற்றுக்கான செலவினங்களை குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி, பிரதமர் மோடி கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்பட 23 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு ஆன மொத்த செலவு ரூ.187 கோடி ஆகும்.
இதில் முக்கிய நாடுகளுக்கான தனித்தனி செலவுகளை பொறுத்தவரை பிரான்ஸ் (ரூ.25.59 கோடி), அமெரிக்கா (ரூ.16.54 கோடி), சவுதி அரேபியா (ரூ.15.54 கோடி), பிரேசில் (ரூ.17.72 கோடி), சீனா (ரூ.10.59 கோடி), இங்கிலாந்து (ரூ.9.91 கோடி) ஆகும்.
மேலும் இந்த ஆண்டு இதுவரை பிரதமர் மோடியின் பயணச்செலவு ரூ.74.58 கோடி என மந்திரி அளித்த பதிலில் கூறியுள்ளார். இது கடந்த மாதம் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணத்துக்கான செலவும் சேர்க்கப்பட்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோன்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடியின் (2021-2024) வெளிநாட்டு பயணச் செலவுகளை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது.
அதன்படி கடந்த 2021-2024 வரையிலான 4 ஆண்டு காலத்துக்கான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.295 கோடி என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதில் 2021-ம் ஆண்டு செலவு ரூ.36 கோடி, 2022-ம் ஆண்டு செலவு ரூ.55.82 கோடி, 2023-ம் ஆண்டு செலவு ரூ.93 கோடி, 2024-ம் ஆண்டு செலவு ரூ.109 கோடி என ஆண்டு வாரியான செலவு விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றையும் மந்திரி சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் வெளிநாட்டு பயணச்செலவு மட்டுமின்றி இந்த பயணங்களின்போது ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பலன் விவரங்கள் குறித்தும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
எனவே அது தொடர்பான பட்டியல்களையும் தனது 35 பக்க எழுத்துப்பூர்வ பதிலில் வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கரீட்டா இணைத்து இருந்தார்.