இந்தியா

அரசியலமைப்பு தங்கள் பாக்கெட்டில் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர்: பிரதமர் மோடி

டெல்லி பாரத் மண்டபத்தில் இந்தியா டுடே குழுமத்தின் சார்பில், ‘கிசான் தக் பாரத்’ வேளாண் மாநாடு நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற கிசான் தக் பாரத் வேளாண் மாநாட்டில், சில தலைவர்கள் அதிகாரத்தில் இல்லாதபோதிலும் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் தங்களின் தனிப்பட்ட சொத்தாக கருதுவதாக பிரதமர் மோடி கூறினார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் இந்தியா டுடே குழுமத்தின் சார்பில், ‘கிசான் தக் பாரத்’ வேளாண் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாடு, 'திறன்மிகு விவசாயி, வளர்ச்சிமிக்க இந்தியா’ என்ற கருப்பொருளின் கீழ் இரண்டு நாள் சர்வதேச மாநாடாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சாகுபடி செலவுகளை குறைக்கவும், அறுவடை திறனை மேம்படுத்தவும், சூரிய சக்தியில் இயங்கும் விவசாய உபகரணங்களௌ உருவாக்குமாறு பொறியாளர்களை கேட்டுக்கொண்டார்.

சட்டைப்பையில் அரசியலமைப்பு

இந்த மாநாட்டில் பேசிய மோடி, “இப்போதெல்லாம், சிலர் நாட்டின் அரசியலமைப்பும் ஜனநாயகமும் தங்கள் சட்டைப்பையில் இருப்பதாக நினைக்கிறார்கள்.

சில தலைவர்கள் அரசாங்கத்தில் இல்லாத நிலையிலும், தங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என்ற ஒரு அசாதாரண உணர்வைத் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றனர்.

அவர்கள் அதிகாரத்தில் இல்லாதபோதும், இப்படி தான் நடந்துகொள்கிறார்கள். இது அதிகாரத்தின் மீதான ஒரு விசித்திரமான போதை.

ஒரு காலத்தில், ஊடகங்கள் மாநிலங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றுக்கு தரவரிசை வழங்கி வந்தன.

குஜராத் முதலிடம்

பொருளாதாரம் தொடர்பான அத்தகைய ஒரு தரவரிசையில், குஜராத் முதலிடம் பிடித்தது; அப்போது நான் முதலமைச்சராக இருந்தேன்.

டெல்லியில் அதிகாரத்தில் இருப்பவர்களால் குஜராத் கௌரவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் விவசாயத் துறை ஆண்டுக்கு சராசரியாக 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு இத்துறை இத்தகைய தொடர்ச்சியான வளர்ச்சியை அடைவது இதுவே முதல் முறை.

வேளாண் வளர்ச்சி

கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று உலக வங்கி கூறியுள்ளது.

வறுமையிலிருந்து மீண்டவர்களில் சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களும் அடங்குவர். அதேவேளையில் கிராமப்புறங்களில் வறுமை கணிசமாக குறைந்துள்ளது.

உலகளாவிய வேளாண் சந்தைகளில் இந்தியாவின் நிலையானது, நாட்டின் ஆண்டு வேளாண் ஏற்றுமதி 4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

பால், பருப்பு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் உற்பத்தியில், இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது, அரிசி உற்பத்தியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

கோதுமை, பருத்தி, காய்கறிகள் மற்றும் மீன் உற்பத்தியில் உலக அளவில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது, இந்த புள்ளிவிவரங்கள் இந்திய விவசாயிகளின் திறன்களை பிரதிபலிக்கின்றன.

தேன் உற்பத்தி சுமார் 80,000 டன்களிலிருந்து 1.5 லட்சம் டன்களாகவும், தோட்டக்கலை உற்பத்தி 28 கோடி டன்களிலிருந்து 35 கோடி டன்களுக்கும் மேலாகவும் அதிகரித்துள்ளது” என பிரதமர் மோடி கூறினார்.

SCROLL FOR NEXT