சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு படையினர் அனைவரும் தனது குடும்பத்தில் ஒரு அங்கம் என தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் பாதுகாப்பு படையினரை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
அப்போது ராணுவ உடையை அணிந்து வந்த மோடி, பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இதையடுத்து அவர்களுடன் உரையாற்றிய மோடி, “நீங்கள் அனைவரும் என் குடும்பத்தில் ஒரு அங்கம். இந்த முறை, நான் பஸ்தரின் காடுகளில் தீபாவளியை கொண்டாட வந்துள்ளேன்.
இது ஒரு காலத்தில் நக்சல் அச்சுறுத்தல் நிலவிய நிலமாக இருந்தது. இருப்பினும், உங்கள் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக, இந்த பகுதியில் நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் ஒரு புதிய வளர்ச்சிக்கான அலை தொடங்கியுள்ளது. உங்கள் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மைக்கு எங்கள் நன்றியை தெரிவிக்க, 140 கோடி நாட்டு மக்கள் சார்பாக நானும் இங்கு வந்துள்ளேன்.
ஒரு நாட்டின் உள் பாதுகாப்பு வலுவாக இருக்கும்போது, வெளிநாட்டு எதிரிகளால் வெற்றி பெற முடியாது. இருப்பினும், உள் பாதுகாப்பு பலவீனமடையும் போது, வெளிநாட்டு எதிரிகளும் தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
எனவே, எல்லைகளில் நமது ஆயுத படைகள் ஆற்றும் அதே பங்கை தான், நாட்டிற்குள் பாதுகாப்பு படையினராகிய நீங்கள் அனைவரும் ஆற்றுகிறீர்கள்.
தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக நீங்கள் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளீர்கள். நீங்கள் அளவற்ற தனிப்பட்ட தியாகங்களை செய்துள்ளீர்கள்.
கோடிக்கணக்கான நாட்டு மக்கள் உங்களை குறித்து பெருமை கொள்கிறார்கள். இந்த நன்றியுணர்வுடனும், தேசத்துடன் இணைந்திருக்கும் உணர்வுடனும், நீங்கள் எங்கிருந்தாலும், காவல் காத்துக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.