இந்தியா

நபிகள் நாயகத்தின் உன்னதமான கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்: குடியரசு தலைவர் - பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி, இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மிலாடி நபி கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மிலாடி நபி

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான மிலாடி நபி, நபிகள் நாயகம் முஹம்மதுவின் பிறப்பைக் குறிக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு நபிகள் நாயகம் முஹம்மது அவர்களின் பிறந்தநாள் ஒரு புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.

அவரது போதனைகள், உலகம் முழுவதும் பலரால் பின்பற்றப்பட்டு, தன்னலமற்ற தன்மையையும் மன்னிக்கும் குணத்தையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்திகிறது.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு, இந்த நாள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் கருணையை போற்றும் ஒரு சிந்தனை மற்றும் நன்றியுணர்வின் தருணமாக அமைகிறது.

இஸ்லாமிய மக்கள் மிலாடி நபி கொண்டாட்டங்களை காலைத் தொழுகைகள் மற்றும் மசூதிகளில் கூடி கொண்டாடப்படுகின்றனர்.

இந்த ஆண்டு, மிலாடி நபி இந்தியாவில் இன்று கொண்டாடப்படுகிறது.

குடியரசுத் தலைவர்

முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட செய்தி குறிப்பில், “மிலாடி நபி நன்னாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் தீவிரமாக பங்களிக்க, நபிகள் நாயகத்தின் உன்னதமான கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

இந்த நிலையில், மிலாடி நபி கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மிலாடி நபி நல்வாழ்த்துகள்.

இந்த தினமானது நம்மிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் மேலும் வளர்க்கட்டும். மேலும், கருணை மற்றும் சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மை எப்போதும் நமக்கு வழிகாட்டட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.