இந்தியா

கேரளத்தில் பிரதமர் மோடி இன்று 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் - திருவனந்தபுரத்தில் ரோடு-ஷோ

பிரதமர் மோடி கிள்ளிப்பால் சந்திப்பு முதல் கரமனை வரையிலான ஒன்றரை கிலோமீட்டர் தூரம் ரோடு-ஷோ செல்கிறார்.

திருவனந்தபுரம்:

கேரளம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பிரசாரம் வருகிற 7-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பா.ஜ.க. 98 தொகுதிகளிலும், காங்கிரஸ் 92 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 76 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகளில் அவற்றின் கூட்டணி கட்சிகள் களம் காணுகின்றன.

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்தமாதம் 29-ந்தேதி பாலக்காடு மற்றும் திருச்சூரில் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி இரண்டாம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட மீண்டும் இன்று கேரளம் வருகிறார். பிற்பகல் 3 மணியளவில் சங்கனாச்சேரி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் திருவல்லா செல்கிறார். அங்குள்ள பொது ஸ்டேடியத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார்.

அந்த கூட்டத்தில் திருவல்லா, ஆரன்முளா, ஹரிப்பாடு, செங்கனூர், மாவேலிக்கரை, ரான்னி கோன்னி, அம்பலப்புழா அடூர், சங்கனாச்சேரி, காயங்குளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு ஆதரவு திரட்டி பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

பின்னர் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து பிரதமர் மோடி திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு கிள்ளிப்பால் சந்திப்பு முதல் கரமனை வரையிலான ஒன்றரை கிலோமீட்டர் தூரம் ரோடு-ஷோ செல்கிறார். அதில் பிரதமருடன் நேமம் தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. கட்சியின் மாநில தலைவருமான ராஜீவ் சந்திரசேகர், பா.ஜ.க. வேட்பாளர்கள் ஸ்ரீலேகா, முரளீதரன், கரமனை ஜெயன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

அதன்பிறகு பிரதமர் மோடி இரவு 7 மணியளவில் விமானம் மூலமாக திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு இன்று மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக இன்று கேரளம் வருகிறார். இதனால் பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.