கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம் 
இந்தியா

கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்.. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு

விமானங்களின் வருகையும் புறப்பாடும் திட்டமிட்டபடி தொடர்ந்தன.

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று வந்தடைந்தது.

விபத்து

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு நிறுத்தும் போது கம்பம் ஒன்றில் விமானம் மோதி விபத்து ஏற்பட்டது.

அந்த கம்பம் விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம் எனப்படும் விமானங்கள் நிறுத்துவதற்காக வழிகாட்டுதல் அமைப்பை கொண்ட VDGS கம்பம் ஆகும்.

காயம் ஏற்படவில்லை

கம்பத்தில் மோதியபோது விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் தானியங்கி படிக்கட்டுகளில் அல்லாமல், கையால் இயக்கப்படும் விமானப் படிக்கட்டு வழியாக இறக்கிவிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை. விமானங்களின் வருகையும் புறப்பாடும் திட்டமிட்டபடி தொடர்ந்தன.

விசாரணை

நடைமுறையின்படி, இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று ஸ்ரீநகர் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விசாரணை முடிந்த பின்னரே சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியவரும். இந்தக் கட்டத்தில் காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது என விமான நிலையம் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT