அமித் ஷா- உமர் அப்துல்லா
இந்தியா

கூட்டணி கட்சிகளே தயாராக இல்லாத போது..! UCC விவகாரத்தில் அமித் ஷாவுக்கு உமர் அப்துல்லா கேள்வி

மாநிலங்கள் மூலமாக இதை ஏன் முன்னெடுக்கிறீர்கள்?

மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, 2029-ம் ஆண்டுக்குக்குள் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதற்கு, பீகாரில் மாநில கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் சட்டமாகிவிடும். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

இது தொடர்பாக தேசிய மாநாடு (National Conference) கட்சி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதைச் செய்வது நாடாளுமன்றத்தின் பணி என்று எங்கள் மாநிலங்களவை உறுப்பினர் ஷமி ஓபராய் கூறியுள்ளார். பல்வேறு மாநிலங்கள் மூலமாக இதை ஏன் முன்னெடுக்கிறீர்கள்? என்.டி.ஏ (NDA) கூட்டணியில் உள்ள அனைவரும் இதை ஏற்கவில்லை.

பீகாரில் JDU எதிர்ப்பு

பீகாரில் இதைச் செயல்படுத்த முடியாது என்று ஜே.டி.யு (JDU) கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. பொது சிவில் சட்டத்தை (UCC) அமல்படுத்த அவர்களது சொந்தக் கூட்டணியினரே தயாராக இல்லாத நிலையில், நாடு முழுவதும் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று இவர்களால் எப்படிச் சொல்ல முடிகிறது? நாடாளுமன்றத்தில் இவர்களால் இதை நிறைவேற்ற முடியும் என்று நான் கருதவில்லை.

இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) என்பது ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுத்தல் போன்ற குடும்ப விவகாரங்களுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்துவதைக் குறிக்கிறது.

பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை வழங்குதல் இதன் நோக்கமாகும்.

எதிர்ப்பு

இந்தியாவின் பல கலாச்சாரப் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் என்றும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு இது அச்சுறுத்தலாக அமையும் என்றும் எதிர்க்கப்படுகிறது

உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT