

பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் 2029ஆம் ஆண்டிற்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.
வெவ்வேறு மதங்களுக்கு உள்ள விதிவிலக்குகளை ரத்து செய்து திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு தொடர்பான ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதே பொது சிவில் சட்டம் ஆகும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலமான உத்தரகாண்டில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது.
குஜராத் , மத்தியப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது
நேற்று முன் தினம் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமித் ஷா, 2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, என்டிஏ ஆட்சியிலுள்ள 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த ஏப்ரலில் மாநிலங்கவளை எம்.பி சீட்டுக்காக மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு தற்போது பாஜகவின் சாம்ராட் சவுத்ரி முதல்வராக உள்ளார். நிதிஷ் குமாரின் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக இருந்தாலும் மக்கள் செல்வாக்கு நிதிஷ் குமாருக்கே உள்ளது. பொது சிவில் சட்டம் விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளம் தொடக்கம் முதல் ஒரு விசித்திர நிலைப்பாட்டில் தான் உள்ளது.
அதாவது, நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த ஐக்கிய ஜனதா தளம், பீகாரில் அதை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நிதிஷ் குமாரும் இதுகுறித்து தன் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அமித் ஷாவின் கருத்துக்கு பின் பேசிய ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஷியாம் ரஜக், "இவ்விவகாரம் குறித்த எங்கள் கட்சியின் நிலைப்பாடு முன்பே எங்கள் தலைவரால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாவை எங்கள் கட்சி ஆதரித்தாலும், பீகாரில் அதைச் செயல்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவாக இல்லை என்று அவர் கூறியிருந்தார்," என்று தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் ஜா, "பொது சிவில் சட்டம் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசவுள்ளோம்." என தெரிவித்துள்ளார்.
பீகாரில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம் விலாஸ் எல்ஜேபி கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் பேசுகையில், "நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை இரண்டிற்கும் எங்கள் கட்சி கட்டுப்பட்டது.
அரசியலமைப்பு சட்டமே பழங்குடியினருக்கு சிறப்பு விலக்குகளை வழங்கியுள்ளது. பொது சிவில் வரைவு வெளிப்படையாக வெளியிடப்பட்டு ஆலோசனைகள் நடந்த பிறகே முடிவை அறிவிப்போம்." என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஆந்திராவில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்று ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு கூறுகையில், "தற்போது இதுகுறித்து எந்த விவாதமும் இல்லை. தேவை ஏற்படும் போது, அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும்." என தெரிவித்தார்.