தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட புதிய தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள பல ஐஐடி (IIT) கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்களின் எண்ணிக்கை, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த அளவை விட பல மடங்கு குறைவாக உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐஐடி வளாகங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் சூழலில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்களின் எண்ணிக்கை, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைப்பதை விட பல மடங்கு குறைவாக உள்ளது என, 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பாக உயர்கல்வி நிறுவனங்களுக்கான யுஜிசியின் வழிகாட்டுதல்கள், ஒவ்வொரு 500 மாணவர்களுக்கும் ஒரு மனநல நிபுணர்/உளவியலாளர் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால்,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (பதில்களின்படி , ஐஐடி கரக்பூர் ஒவ்வொரு 1,136 மாணவர்களுக்கும் ஒரு ஆலோசகருடனும், ஐஐடி ரூர்க்கி ஒவ்வொரு 1,317 மாணவர்களுக்கும் ஒரு ஆலோசகருடனும், மற்றும் வாரணாசியில் உள்ள ஐஐடி (பிஹெச்யு) ஒவ்வொரு 4,750 மாணவர்களுக்கும் ஒரு ஆலோசகருடனும் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே தகவல் அறியும் உரிமை கோரிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐஐடி கரக்பூரில் 10 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதே காலகட்டத்தில் ஐஐடி ரூர்க்கியில் மூன்று தற்கொலைகளும், ஐஐடி-பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மூன்று தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.
ஐஐடி-பம்பாயில் பொறியியல் படித்து வந்த தலித் மாணவரான சாஹில் வக்கோடே தற்கொலை செய்துகொண்டதற்கு நிறுவன ரீதியான பொறுப்புக் கோரி மும்பையில் போராட்டங்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன.
ஐஐடி-பம்பாயின் முன்னாள் மாணவரான பிரணவ் ஜீவன் விடுத்த விரிவான தகவல் அறியும் உரிமை வினவல்களுக்குப் பதிலளித்த ஜோத்பூர், ரோபர், கரக்பூர், பாட்னா, ரூர்க்கி, திருப்பதி மற்றும் வாரணாசியில் உள்ள ஐஐடி-க்கள், அங்குள்ள ஆசிரியர்கள் மத்தியில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவ நிலை குறித்த தகவல்களையும், அந்த நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களுக்கான மனநல மையங்களை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த தரவுகளையும் வெளியிட்டுள்ளன.
இது தவிர, மனநல ஆலோசகர்கள் குறித்த தரவுகளின் அடிப்படையில் ஐஐடி கரக்பூரில் 14,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 12 வழக்கமான ஆலோசகர்களும், ஒப்பந்த அடிப்படையில் ஒரு மனநல மருத்துவரும் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி ரூர்க்கியில் 10,500 மாணவர்களுக்கு அதன் நலவாழ்வு மையத்தில் எட்டு ஆலோசகர்களும் ,ஐஐடி-பிஹெச்யுவில் 9,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இரண்டு தொழில்முறை ஆலோசகர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது .
ஐஐடி ஜோத்பூரில் சுமார் 4,000 மாணவர்களுக்கு ஆறு தொழில்முறை ஆலோசகர்களும் மனநல மருத்துவர்களும்; ஐஐடி பாட்னாவில் சுமார் 4,000 மாணவர்களுக்கு இரண்டு ஆலோசகர்களும்; மற்றும் ஐஐடி திருப்பதியில் சுமார் 1,700 மாணவர்களுக்கு மூன்று ஆலோசகர்களும் உளவியலாளர்களும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த கவல் அறியும் உரிமை மனுவிற்கு அளிக்கப்பட்ட பதிலில் வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, மனநலம் மற்றும் நல்வாழ்வு குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) வழிகாட்டுதல்களில் உள்ள பரிந்துரையின்படி, ஐஐடி ரோபர் மட்டுமே போதுமான ஆலோசகர்களைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுமார் 3,000 மாணவர்களுக்கு, ஐஐடி ரோபர் ஆறு ஆலோசகர்களையும் இரண்டு வருகை தரும் மனநல மருத்துவர்களையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பிடப்பட்ட ஏழு ஐஐடி-களில் ஏறக்குறைய எதுவும் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) ஆசிரிய உறுப்பினர்களின் பிரதிநிதித்துவ சதவீதங்களைப் பூர்த்தி செய்யவில்லை என்பது தெரியவந்ததுள்ளது.
இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, பணியமர்த்தல்களில் பட்டியல் சாதியினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.