2,700 ஆண்டுகளுக்கு பின்.. இந்தியாவிலிருந்து புறப்படும் இஸ்ரேலின் 'தொலைந்துபோன' பழங்குடியினர் - யார் இவர்கள்?

கி.மு. 722-ல் அசிரியப் பேரரசு இஸ்ரேலைத் தாக்கியது. இஸ்ரேலின் காணாமல் போன பழங்குடியினரின் சந்ததியினர்
2,700 ஆண்டுகளுக்கு பின்.. இந்தியாவிலிருந்து புறப்படும் இஸ்ரேலின் 'தொலைந்துபோன' பழங்குடியினர் - யார் இவர்கள்?
Published on

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சுமார் 5,800 பினே மெனாஷே சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தற்போது மொத்தமாக தங்களின் 'வாக்களிக்கப்பட்ட பூமி'யான இஸ்ரேலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.

யார் இந்த பினே மெனாஷே?

இவர்கள் தங்களை விவிலியக் கதைகளில் வரும் இஸ்ரேலின் பத்து காணாமல் போன பழங்குடிகளில் ஒன்றான 'மெனாஷே' வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

விவிலியத்தின்படி, கி.மு. 722-ல் அசிரியப் பேரரசு இஸ்ரேலைத் தாக்கியபோது, அங்கிருந்த 12 பழங்குடியினக் குழுக்களில் 10 குழுக்கள் சிதறிப் போய் வரலாற்றில் இருந்து மறைந்தன.

அதில் ஒரு பிரிவினர் ஆப்கானிஸ்தான் வழியாக வடகிழக்கு இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வடகிழக்கு இந்தியாவின் குக்கி-சோ இனக்குழுவின் ஒரு பகுதியினராக இருந்த இவர்கள், 1951இல் முறையாகத் தங்களை யூதர்களாக அடையாளப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன்பு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வந்தனர்.

2005-ஆம் ஆண்டில், இஸ்ரேலின் தலைமை ராபி இவர்களை இஸ்ரேலின் காணாமல் போன பழங்குடியினரின் சந்ததியினர் என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.

தற்போது சுமார் 5,000 பினே மெனாஷே மக்கள் ஏற்கனவே இஸ்ரேலில் வசித்து வருகின்றனர்.

மீதமுள்ள 5,800 பேரையும் 2030-ஆம் ஆண்டிற்குள் இஸ்ரேலுக்கு அழைத்து வர இஸ்ரேல் அமைச்சரவை கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்துக்கு அரசு, 27 மில்லியன் டாலர் (சுமார் ரூ.225 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது.

தங்கள் நம்பிக்கைப்படி, 2,700 ஆண்டுகால நாடுகடத்தலுக்குப் தாய்நாட்டிற்குத் திரும்பும் இந்த குடியேற்றத்தை இம்மக்கள் 'அலியா' என்று அழைக்கின்றனர்.

இவர்கள் இஸ்ரேலின் வடக்கு பகுதியான கலிலீ பகுதியில் குடியமர்த்தப்பட உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல் அச்சத்தால் இப்பகுதி மக்கள் வெளியேறியுள்ள நிலையில், அந்தப் பகுதியை மீண்டும் மேம்படுத்தவே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இவர்களுக்கான விமானக் கட்டணம், எபிரேய மொழி வகுப்புகள் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை இஸ்ரேல் அரசு கவனித்துக் கொள்ளும். இவர்கள் 2026 முதல் 2030-க்குள் படிப்படியாக இஸ்ரேல் சென்றடைவார்கள்.

தற்போது பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இவர்களின் இடப்பெயர்வு குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com