இந்தியா

நொய்டாவில் சோகம்: உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலி!

தீயணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார் 125 பகுதியில் உள்ள ஐந்து முதல் ஆறு உணவகங்கள் திடீரெனப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடைகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறி வானத்தை நோக்கி எழும்பியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டது.

LPG சிலிண்டர்களால் ஆபத்து

இதுகுறித்து நோய்டா முதன்மை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமார் கூறுகையில், "தீ விபத்து ஏற்பட்ட கடைகளுக்குள் ஏராளமான எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் தீயணைப்பு வீரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். கடைகளுக்குள் யாரேனும் சிக்கிக் கொண்டுள்ளனரா என்பதைக் கண்டறிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

எல்பிஜி சமையல் எரிவாயு வெடித்தது கூறப்படுகிறது.ஆனால் இன்னும் முடிவு தெரியவில்லை.

பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் செக்டார் 126 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.

எக்ஸ்பிரஸ்வேயில் திகுதிகுவென எரிந்த சொகுசுப் பேருந்து!

இதற்கிடையில், நோய்டாவில் அண்மையில் நடந்த மற்றொரு பெரிய தீ விபத்தும் மக்கள் மத்தியில் தற்போதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அக்டோபர் 6-ஆம் தேதி, நோய்டா - கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு ஸ்லீப்பர் பேருந்து திடீரெனத் தீப்பிடித்து திகுதிகுவென எரியத் தொடங்கியது.

பேருந்து முழுவதும் தீ பரவி, அடர்ந்த புகை மூட்டம் வானில் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்திற்குள் இருந்த அனைத்து பயணிகளும் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள் சாலையோரமாக நடந்து சென்றனர்.

இந்த பேருந்து நோய்டாவில் இருந்து ஆக்ராவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கிரேட்டர் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் காவல் நிலையப் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது.

தொடரும் தீ விபத்துக்கள் – பொதுமக்கள் கவலை

முதலில் சொகுசுப் பேருந்து எரிந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது ஒரே இடத்தில் 6 உணவகங்கள் தீக்கிரையான சம்பவம் நொய்டா பகுதியில் அடுத்தடுத்து தீ விபத்துக்கள் குறித்த அச்சத்தையும், பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றிய விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.

ஒருவர் பலி

தீ விபத்தில் ஒருவர் பலி என்றும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் அஞ்சுகின்றனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT