இந்தியா

எஸ்.ஐ.ஆர். படிவம் 6 தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை - உச்ச நீதிமன்றம் விளக்கம்!

பீகார் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, புதிய படிவம் 6 நடைமுறையிலேயே இல்லை. இல்லாத ஒரு படிவத்திற்கு நீதிமன்றம் எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்?

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் பயன்படுத்தப்படும் படிவம் 6- தொடர்பாக தாங்கள் எந்தவித அனுமதியோ, உத்தரவோ வழங்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் பீகார் வாக்காளர் பட்டியலின் எஸ்.ஐ.ஆர். பணிகளை ஆய்வு செய்தபோது, இந்த படிவம் நடைமுறையிலே இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரியா மிஸ்ரா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுமீதான விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தில் பின்வரும் முக்கியக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது.

எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, படிவம் 6-ல் விண்ணப்பதாரரின் குடும்பப் பின்னணி மற்றும் முந்தைய ஆவணங்களை இணைப்பது போன்ற கூடுதல் நிபந்தனைகளைச் சேர்த்திருந்தது.

இந்த மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்ட வாதத்தை நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

முந்தைய தீர்ப்புக்கும் இதற்கும் தொடர்பில்லை

மே 2026-ல் வழங்கப்பட்ட பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான தீர்ப்பின் போது இந்த புதிய படிவம் 6 நடைமுறையில் இல்லை என்றும், எனவே அத்தீர்ப்பை இதனுடன் ஒப்பிட்டுப் பேசக் கூடாது என்றும் நீதிபதிகள் விளக்கமளித்தனர்.

அக்டோபர் 27க்கு ஒத்திவைப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் இந்த விவகாரம் தொடர்பான மனுக்களையும், அக்டோபர் 27ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்ச்சையின் பின்னணி என்ன?

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது படிவம் 6-ல் சில புதிய நிபந்தனைகளைச் சேர்த்தது. அதாவது, புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பிப்பவர்கள், தங்களது பெற்றோரோ அல்லது தாத்தா பாட்டியோ முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்களா என்ற விவரங்களையும் சமர்பிக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், 1960-ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின்படி, படிவம் 6 என்பது ஒரு சட்டப்பூர்வ ஆவணம்.

இதில் மாற்றங்களைச் செய்ய நாடாளுமன்ற முறைப்படியான சட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக மென்பொருள் மூலம் இதை மாற்ற முடியாது. எனக் கூறப்பட்டிருந்தன.

தேர்தல் ஆணைய சர்ச்சை

இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில்தான் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு, மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் (சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி) உடன்பாடு மற்றும் ஒப்புதல் இல்லாமலேயே இந்த மாற்றங்களைச் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்தல் ஆணையம் அறிக்கை

தேர்தல் ஆணையத்தில் சர்ச்சை வெடித்த நிலையில், கடந்த மே 2026-ல் பீகார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்ததை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “படிவம் 6 மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது” எனத் தெரிவித்திருந்தது.

இதனை அக்டோபர் 5 மற்றும் அக்டோபர் 12, 2026 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணைகளின் போது உச்ச நீதிமன்றம் கடுமையாக மறுத்தது.

இந்நிலையில்தான் இன்றும், மே 2026-ல் பீகார் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, இந்த புதிய படிவம் 6 நடைமுறையிலேயே இல்லை. எனவே, இல்லாத ஒரு படிவத்திற்கு நீதிமன்றம் எப்படி ஒப்புதல் அளிக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 27 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இந்த புதிய படிவம் 6 நடைமுறை செல்லுமா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தும்.

SCROLL FOR NEXT