

பழனி கோயில் நிலம் அபகரிப்பு விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரை, ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வெள்ளத்துரை 60 நாட்கள் சிறையில் இருப்பதாகவும், ஜஸ்டின் மணிகண்டன் 45 நாட்கள் சிறையில் உள்ளதாக வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் நிலத்தின் உண்மையான மதிப்பு எவ்வளவு? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் 100 கோடி ரூபாய் மதிப்பிலானது என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், பல கோடி மதிப்பு நிலம் வெறும் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்டதா? இதில் மோசடி இல்லையா? கோயிலுக்கு சொந்தமான நிலத்தை எப்படி வாங்க முடியும் இது மோசடி இல்லையா? என்று கேள்விகளை எழுப்பினர்.
பின்னர் நில மோசடி வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெறட்டும், அதன் பிறகு ஜாமின் குறித்து முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர். மேலும், வழக்கின் புலன் விசாரணை எப்போது முடியும் என்று தமிழ்நாடு அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசாந்தோ, புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைந்து விசாரணையை முடிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் காவல்துறையினரின் புலன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால் தற்போதைய நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது எனவும்,
ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறை யீட்டு மனுக்களை புலன் விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்த பின்பாக பரிசீலிக்கலாம் என தெரிவித்து வழக்கை நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.