நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட்-யூஜி தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகப் பரவலான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மே 12-ஆம் தேதி அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீட்-யூஜி மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், தொடர்புடைய 14 எதிரிகள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முறையான குற்றச்சாட்டுப் பதிவுகள் நவம்பர் 21-ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நடைபெறும் என்று சிறப்பு நீதிபதி அஜய் குப்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் மீது குற்றச் சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, ஆவணங்களை அழித்தல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) சட்டத்தின் விதிகளின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. மேலும், அனைத்து எதிரிகள் மீதும் பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 63-ன் கீழ் பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டும் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 25-ஆம் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணையைத் தினசரி அடிப்படையில் நடத்தவுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட்-யூஜி தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகப் பரவலான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மே 12-ஆம் தேதி அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
இதுதொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத் துறை, ஏற்கனவே விரைவு நீதிமன்றத்தில் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இவற்றுடன் தொடர்புடைய மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டைச் சேர்ந்த சேஷ்ராவ் பஜ்ரங் சூர்யவன்ஷி என்ற ராஜ் சூர்யவன்ஷி என்பவரை கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி கைது செய்த சிபிஐ, அவர் மீதான கூடுதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.