நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி தலைமையில் இளைஞர்கள் நடத்திய போராட்டம், தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.
இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு. எனவே இளைஞர்கள், மாணவர்களை கரும் முயற்சியில் பாஜக மற்றும் இந்துத்துவா வலதுசாரிகள் மெனக்கிட்டு வருகின்றனர். பாஜகவினர் இன்ஸ்டாவில் தீவிரமாக செயல்படும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அவரும் தினம் தினம் இன்ஸ்டாவில் செல்பி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் பாஜகவின் சித்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இளைய தலைமுறையை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகஸ்ட் 6 அன்று நாடு முழுவதும் உள்ள ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
மும்பையில் உள்ள நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
India's International Movement to Unite Nations என்ற அமைப்பின் 15வது ஆண்டு நிறைவு மாநாட்டின் தொடக்க விழாவில் இது நடைபெறுகிறது
15 முதல் 19 வயதுக்குட்பட்ட 2,000க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.
"உலகை ஒன்றிணைப்பதில் இளைஞர்களின் பங்கு - இந்திய வழி" என்ற பொருண்மையில் இது நடக்கிறது.
மாணவர் போராட்டங்களுக்கு பிறகு திடீரென தலைவர்கள் ஜென் இசட் இளைஞர்களுடன் கலந்துரையாட ஆர்வம் காட்டுவதை சிவ சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கிண்டல் செய்துள்ளார்.
"திடீரென்று அனைவரும் ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா இளைஞர்களுடன் கலந்துரையாட விரும்புகிறார்கள்.
சமூக வலைதளங்களில் அவர்களுக்கு பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு நான் கேட்கும் எளிய கேள்வி ஒன்றுதான்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அந்த மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப்புகை, கைது நடவடிக்கைகள் பாய்ந்த போதும், பெண்கள் தரக்குறைவாக நடத்தப்பட்ட போதும் நீங்கள் எங்கே போனீர்கள்?
அவர்களைக் காப்பாற்ற ஏன் அப்போது தலையிடவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.