இந்தியா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதான்.. தயவுசெய்து ராஜினாமா செய்யுங்கள் - 7வது நாளை எட்டிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்

நீதிக்காகப் போராடுபவர்களை அரசாங்கம் 'பயங்கரவாதிகள்' என்று அழைக்கிறது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சிபிஎஸ்சி முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி ஜந்தர் மந்தரில் நடைபெறும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று ஏழாவது நாளாகத் தொடர்கிறது.

இன்று தர்மேந்திர பிரதான் பிறந்த நாளாகும். இது இன்று போராட்டக்களத்திலும் இது எதிரொலித்தது.

பிறந்தநாள் வாழ்த்து

சில இளைஞர்கள் பிறந்தநாள் பாடல் பாட, கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே ஒரு பலகையில், பிரதான், பிறந்தநாள் வாழ்த்துக்கள், தயவுசெய்து ராஜினாமா செய்யுங்கள்' என்று எழுதும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

போராட்டக் களத்தில் பேசிய தீப்கே, பிறந்தநாள் பரிசாகத் ராஜினாமா கடிதத்தை தயாரித்து அனுப்பத் தயாராக இருப்பதாகவும், பிரதான் செய்ய வேண்டியதெல்லாம் அதில் கையெழுத்திடுவது மட்டுமே என்று கிண்டலாகக் கூறினார்.

தற்கொலைகள்

நீட் தேர்வு முறைகேடு காரணமாக நாடு முழுவதும் 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், இந்த மரணங்கள் அனைத்திற்கும் கல்வி அமைச்சரே முழுப் பொறுப்பு என்றும் தீப்கே குற்றம் சாட்டினார்.

பயங்கரவாதிகள்

ரஷியா-உக்ரைன் போரைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறும் பிரதமரால், நாட்டின் கேள்வித்தாள் கசிவுகளைத் தடுத்து நிறுத்த முடியாதா என்று கேள்வி எழுப்பியதுடன், நீதிக்காகப் போராடுபவர்களை அரசாங்கம் 'பயங்கரவாதிகள்' என்று அழைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

போராட்டத்தின் ஐந்தாவது நாளில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதை தீப்கே சுட்டிக்காட்டினார்.

சோனம் வாங்சுக்

இந்த போராட்டத்திற்கு முதல் நாளில் இருந்தே ஆதரவாக இருக்கும் லடாக் செயல்பாட்டாளரும் விஞ்ஞானியுமான சோனம் வாங்சுக், ஜூன் 27ஆம் தேதிக்குள் மத்திய அரசிடமிருந்து சாதகமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாவிட்டால், ஜூன் 28 முதல் ஜந்தர் மந்திர் முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவேன் என அறிவித்துள்ளார்.