உயர்மட்ட குழு 
இந்தியா

விண்வெளி முதல் பாதுகாப்பு துறை வரை.. தேர்வு அமைப்பை சீர்செய்யும் உயர்மட்ட குழுவில் இடம்பெற்றவர்கள் முழு விவரம்

அறிவிப்புகளை கடந்த சில நாட்களில் பிரதமர் மோடி அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் 1 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தியதன் விளைவாக நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலைத்துள்ளார்.

நேற்று முன் தினம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் சிஜேபி போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்தது.

இன்ஸ்டாகிராம் வீடியோவில் மோடி

தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம், வினாத்தாள் கசிவை தடுக்க சிறப்பு மசோதா, தேர்வு முறையைச் சீரமைக்க உயர்மட்டக் குழு உள்ளிட்ட அறிவிப்புகளை கடந்த சில நாட்களில் பிரதமர் மோடி அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக நேற்று வினாத்தாள் கசிவுச் சம்பவங்களைத் தடுத்து, தேர்வு முறையை முற்றிலும் நவீனமயமாக்கிச் சீரமைக்க இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்ட குழுவை அமைப்பதாக இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மோடி அறிவித்தார்.

உயர்மட்ட குழு

இந்த குழுவில் வெவ்வேறு துறைகளை சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் கீழ் வருமாறு,

குழு தலைவர் - நந்தன் நிலேகணி

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், இந்தியாவின் ஆதார் கார்டு திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளராகக் கருதப்படுபவர்.

வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மையப் பாதுகாப்பு, தேர்வர் சரிபார்ப்பு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியீடு என அனைத்துக் கட்டங்களிலும் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கி குழுவை வழிநடத்த உள்ளார்.

டாக்டர் எஸ். சோமநாத்

2022–2025 வரை இஸ்ரோவின் தலைவராக இருந்தவரும் விண்வெளித் துறை முன்னாள் செயலாளருமான சோமநாத், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் பெரிய அளவிலான அமைப்புகளை திட்டமிடுவதில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

தபன் குமார் தேகா

2022–2026 வரை இந்திய உளவுத்துறையின் இயக்குநராக இருந்த தேகா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.

இவர் தேர்வு மையங்களின் பாதுகாப்பு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராசிரியர் வி. காமகோடி

ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநரான இவர், கணினி கட்டமைப்பு மற்றும் சைபர் பாதுகாப்பில் நிபுணர்.

கல்வித்துறை சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தேர்வு முறையில் கணினி சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும் நுட்பங்களை புகுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கடந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் விழாவில் பேசிய காமகோடி, மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தில் மருத்துவ குணம் உள்ளதாக பேசி விமர்சனத்துக்கு ஆளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனிதா கர்வால்

2017–2026 வரை சிபிஎஸ்சியின் தலைவராகவும், பள்ளி இடைநிலைக் கல்வித்துறை செயலாளராகவும் பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அனிதா கர்வால். தேசியக் கல்விக் கொள்கை 2020உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

அம்ரித் லால் மீனா

2024–2025 வரை பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகவும், நிலக்கரித் துறை செயலாளராகவும் பணியாற்றிய அம்ரித் லால் மீனா 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். நிர்வாகம் மற்றும் தளவாடப் போக்குவரத்தை சீரமைப்பதில் அனுபவம் வாய்ந்தவர் இவர்.

தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு

இந்த உயர்மட்டக் குழு, தேசிய தேர்வு முகமையை பலப்படுத்துவதுடன், போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கத் தேவையான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கும்.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு முறையில் பெரிய அளவிலான தொழில்நுட்ப சீர்திருத்தங்களை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.