பிரதமரின் களங்கப்பட்ட பிம்பத்தைச் சரிசெய்யவே புதிய உயர்மட்ட குழு..!- ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

தேசிய தேர்வு முகமைக்கு ஒரு முழுநேர தலைமை இயக்குநரைக்கூட அது நியமிக்கவில்லை.
PM Modi- Jairam ramesh
Published on

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட குழு அமைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத், உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா கர்வால் மற்றும் அம்ரித் லால் மீனா இடம்பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடி வீடியோ வெளியீடு

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தேர்வு முறையை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் வகையில் நந்தன் நிலேகனிக தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நந்தன் நிலேகனி குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.

வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்மட்ட பணிக்குழு பரிந்துரை செய்யும்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.

தேர்வுகளின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்கும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய யாரும் தப்ப முடியாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

நண்பர்களே, கடந்த ஜூன் 2024-ல், நீட்-யுஜி (NEET-UG) உள்ளிட்ட பல தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து, தேர்வுகள் வெளிப்படையாகவும், சுமுகமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மோடி அரசு ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்தது.

ஜூலை 2026-ல், நீட்-யுஜி மற்றும் பிற தேர்வுகளில் மீண்டும் முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து, தேர்வு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதற்காக மோடி அரசு ஒரு "உயர்மட்டப் பணிக்குழுவை" அமைத்துள்ளது.

டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் குழுவின் 101 பரிந்துரைகளை மோடி அரசு இன்னும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. மாறாக, 2024 முதல் 2026 வரையிலான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, தேசிய தேர்வு முகமைக்கு (NTA) ஒரு முழுநேர தலைமை இயக்குநரைக்கூட அது நியமிக்கவில்லை.

இறுதியில், இவை அனைத்தும் பிரதமரின் சரிசெய்ய முடியாத அளவுக்குக் களங்கப்பட்ட பிம்பத்தைச் சரிசெய்வதற்கான ஒரு உயர்மட்ட முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com