இந்தியாவில் போதைப்பொருட்கள் புழக்கம் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
ஏற்கனவே மத்திய அரசின் கீழ் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயங்கி வருகிறது.
இந்நிலையில் போதைப்பொருள் தொடர்புடைய கடும் குற்றங்களுக்கு நீதி வழங்கலை விரைவுபடுத்தும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட்டார்.
போதை மருந்துகள் மற்றும் சைகோட்ரோபிக் பொருள்கள் (NDPS) சட்டம் 1985-இன் கீழ் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் சாதாரண விசாரணை நீதிமன்றங்களின் சிறப்பு நீதிபதிகளாலேயே கையாளப்பட்டு வந்தன. இதனால் வழக்குகள் முடிவடையப் பல ஆண்டுகள் தாமதமானது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற 'நார்கோ-கோஆர்டினேஷன் சென்டர்' விழாக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா,
முக்கியமான போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மிக விரைவாகத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் பிரத்யேக NDPS சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயாராகி வருவதாக அமித் ஷா தெரிவித்தார்.
விழாவில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான போதைப்பொருள் கட்டுப்பாட்டு 'விஷன் டாக்குமெண்ட்' என்ற கொள்கை வரைவை அமித் ஷா வெளியிட்டார்.
இந்த கூட்டத்தின் போது, பல்வேறு மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 2,09,500 கிலோ எடையுள்ள ரூ.6,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை அழிக்கும் செயல்முறையை ஆன்லைன் மூலம் அமித் ஷா துவங்கி வைத்தார்.
2014 - 2026 வரையிலான பாஜக ஆட்சிக் காலத்தில் 1.18 கோடி கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 8.75 லட்சம் வழக்குகள் பதியப்பட்டு ரூ.89,896 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டதாக அமித் ஷா குறிப்பிட்டார்.
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கும், நிதியாதாரத்தை அழிப்பதற்கும் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் வின் கீழ் விசாரணை நடத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.