மகாராஷ்டிர அரசியலில் தேசியவாத காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் மீண்டும் ஒன்றிணைய உள்ளதாக எழுந்துள்ள ஊகங்கள் குறித்து மகாராஷ்டிர துணை முதலமைச்சரும் என்சிபி கட்சித் தலைவருமான சுனேத்ரா பவார் மவுனம் கலைத்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அவர், உரிய காலம் வரும்போது எல்லாமே வெளிப்படையாக தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளான சுனேத்ரா பவார் தலைமையிலான அணியும், சரத் பவார் தலைமையிலான என்சிபி (எஸ்பி) கட்சியும் மீண்டும் இணையக்கூடும் என்ற விவாதம் மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் சுனேத்ரா பவார் அணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான பிரபுல் படேல் மற்றும் பார்த் பவார் ஆகியோர் மூத்த தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த இணைப்பு குறித்த சலசலப்புகள் அதிகரித்தன. இருப்பினும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தான் என்றும் அரசியல் பேசப்படவில்லை என்றும் அப்போது விளக்கமளிக்கப்பட்டது.
மறுபுறம், மறைந்த தலைவர் அஜித் பவார் உயிருடன் இருந்த போதே இரண்டு பிரிவுகளை இணைப்பது குறித்து பேசப்பட்டதாகவும், அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்ததாகவும் சுனில் தட்கரே போன்ற சில மூத்த தலைவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து பேசிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரசின் இரு பிரிவுகள் இணைவது குறித்து சரத் பவாரோ அல்லது சுனேத்ரா பவாரோ தங்களுக்குள் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், இரு தலைவர்கள் மட்டுமே இதுகுறித்து தெளிவுபடுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளைக் கருத்தில் கொண்டு இரு அணிகளும் ஒரே குடையின் கீழ் வருமா என்ற கேள்விக்கு தற்போதைக்கு தெளிவான பதில் அளிக்கப்படவில்லை. எனினும், சுனேத்ரா பவாரின் தற்போதைய கருத்து அரசியல் வட்டாரத்தில் மேலும் எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன், வரும் நாட்களில் இதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற கணிப்புகளும் எழுந்துள்ளன.