

அமெரிக்காவில் யூனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி பீதியை ஏற்படுத்தியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பணியாளர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள நெவார்க் நகரிலிருந்து லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நோக்கி யூனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் (போயிங் 737 மேக்ஸ் 9) சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 46 பயணிகளும் 6 பணியாளர்களும் பயணம் செய்தனர். விமானம் பறந்து கொண்டிருந்த போது, பயணியொருவர் திடீரெனக் குழப்பமான முறையில் நடந்து கொண்டதுடன், காக்பிட் எனப்படும் விமானி அறைக்குள் நுழைய முயன்றதாகவும், மேலும் தன்வசம் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணியின் இந்த திடீர் செயலால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உஷாரான விமானப் பணியாளர்கள், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அந்த நபரை விமானத்தின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக கட்டுப்படுத்தினர். இதற்கிடையில், விமானிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு மிக உயர்ந்த அபாய நிலையிலான அவசரகாலக் குறியீட்டை அனுப்பினர். விமானத்தில் சட்டவிரோதத் தலையீடு இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கும் 'ஸ்குவாக் கோடு' எண்களும் பயன்படுத்தப்பட்டன.
எந்தவித அசம்பாவிதமும் இன்றி லூசியானா மாநிலம் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் நியூ ஏர்லைன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஆயுதம் ஏந்திய சட்ட அமலாக்க அதிகாரிகளும் காவல்துறையினரும் உடனடியாக விமானத்திற்குள் ஏறி அந்த நபரை எந்தவித எதிர்ப்பும் இன்றி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஜெபர்சன் பாரிஷ் திருத்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது திட்டமிட்ட தீவைப்பு குறித்துத் தவறான தகவல் பரப்பியது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்துக் பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.