பள்ளி மாணவர்கள் 1975 முதல் 1977 வரையிலான தேசிய நெருக்கடி நிலை குறித்த பகுதியை அறிந்துகொள்ளும் வகையில், 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் புதிதாக ஒரு பகுதியை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம்(NCERT) அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த பாடப்பகுதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசாங்கத்தின் கீழ் அமல்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் இடை நீக்கம், பத்திரிகை தணிக்கை மற்றும் பரவலான அரசியல் கைதுகள் ஆகியவற்றை விவரிக்கிறது.
இந்த பாடத்திட்ட திருத்தம், ‘சமூகத்தை புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற தலைப்பில் பாட நூலில் இடம்பெற்றுள்ளது.
சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட இந்த பகுதியை, ‘ஜனநாயகத்திற்கான சவால்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1970களின் முற்பகுதியில் அதிகரித்து வந்த வேலையின்மை, பணவீக்கம் மற்றும் முறைகேடான நிர்வாகம் ஆகியவற்றின் மீது மக்களிடையே வளர்ந்து வந்த அதிருப்தியையும், இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நடந்த பரவலான போராட்டங்களையும் இது விளக்குகிறது.
"உள்நாட்டுக் குழப்பம்" என்ற அடிப்படையில் கடந்த 1975 ஜூன் மாதம் தேசிய அவசரநிலை எவ்வாறு அறிவிக்கப்பட்டது என்பதையும், அதன் விளைவாக குடிமக்களின் சுதந்திரங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்பட்டதையும் இது விவாதிக்கிறது.
சோசலிச சிந்தனையாளரான ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில், மாணவர்களையும் குடிமக்களையும் ஆட்சியை எதிர்க்கத் திரட்டிய மக்கள் இயக்கங்களையும் இது எடுத்துக்காட்டுகிறது.
1977-ல் நெருக்கடி நிலை நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆளும் அரசாங்கம் தேர்தலில் தோற்று, இந்திய ஜனநாயகத்தின் உச்சபட்ச வலிமை நிரூபிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது.
வரலாற்றுத் தவறுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, அந்த "இருண்ட அத்தியாயம்" நினைவுகூரப்பட வேண்டும் என்று வாதிட்டு, செய்தி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி இந்த பதிவை ஆதரித்துள்ளது.