ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தாய்நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க காவல் துறையினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அஞ்சலியையும் ஆழமான நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,
காவலர் நினைவு நாள் என்பது, மிகவும் சவாலான சூழல்களிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நம் காவல்துறை பணியாளர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கும் ஒரு தருணமாகும்.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது முதல் குற்றச் செயல்களைத் தடுப்பது, அவசர காலங்களில் விரைந்து செயல்படுவது மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என அவர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது.
கடமையாற்றும் போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரமிக்க காவல்துறை பணியாளர்களுக்கு நாம் மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் துணிச்சல், தளராத அர்ப்பணிப்பு மற்றும் உன்னதமான தியாகம் ஆகியவை நம் தேசத்தின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று, லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவப் படையினரின் திடீர் தாக்குதலை எதிர்த்து, எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 10 இந்திய CRPF காவலர்கள் வீர மரணமடைந்தனர்.
அவர்களின் நினைவாகவும், நாட்டுக்காக உயிர்நீத்த அனைத்து காவல் துறையினரைக் கௌரவிக்கவும் இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புது டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து தியாகிகளுக்குத் தங்களின் வீர வணக்கத்தைச் செலுத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.