பயன்பாட்டிற்கு பிறகு வாட்ஸ்அப் வெப் கணக்கை கட்டாயம் லாக் அவுட் செய்ய வேண்டும் என பயனர்களுக்கு தேசிய சைபர் குற்ற பிரிவு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் வெப் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அணுகல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் கட்டாயம் 'லாக் அவுட்' (Log out) செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு பயனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அலுவலகக் கணினிகள் அல்லது பொதுவான கணினிகளில் வாட்ஸ்அப் வெப் கணக்கை 'லாக்-இன்' செய்த நிலையிலேயே விட்டுச் சென்றால், சைபர் குற்றவாளிகள் அல்லது மூன்றாம் நபர்கள் உங்கள் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கவும், உங்கள் பெயரில் மற்றவர்களுக்கு மோசடிச் செய்திகளை அனுப்பவும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்குகளைக் கைப்பற்றி, ஊழியர்களிடம் அவசரமாகப் பணம் கேட்பது போன்ற நிதி மோசடிகள் நடப்பதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வெறுமனே இணைய உலாவியின் (Browser) பக்கத்தையோ அல்லது டேபையோ (Tab) மூடுவது கணக்கிலிருந்து வெளியேறியதாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும் கணக்கு தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு முறை வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தி முடித்த பிறகும், அமைப்புகளுக்குச் சென்று முறையாக 'Log out' செய்ய வேண்டும்.
அரசு சார்ந்த ரகசியங்கள், அலுவலக ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்களைக் கணினி வழியாக வாட்ஸ்அப் வெப்பில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
பிரவுசிங் சென்டர்கள் (Cyber cafes), ஹோட்டல் கணினிகள் அல்லது மற்றவர்களின் சாதனங்களில் வாட்ஸ்அப் வெப்பைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
நம்பகமான கணினியில் தற்காலிகமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், 'Incognito' அல்லது 'Private Browsing' முறையைப் பயன்படுத்தி, முடிந்தவுடன் லாக் அவுட் செய்ய வேண்டும்.
உங்கள் மொபைல் வாட்ஸ்அப்பில் உள்ள Linked Devices பகுதியை அவ்வப்போது சரிபார்த்து, அறிமுகமில்லாத சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால் உடனடியாக நீக்க வேண்டும் என்று தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு பயனர்களுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.