கேரள மாநிலம் கொச்சி அருகே, இரண்டு பெண்கள், ஒரு இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழந்த மினி கூப்பர் கார் விபத்து வழக்கு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் ‘அடையாளம் தெரியாதவர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொச்சி அருகே உள்ள நெடும்பாசேரியில் நேற்று முன்தினம் (அக்.11) அதிகாலை வேளையில், மதுபோதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட மினி கூப்பர் சொகுசு கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தேவிகா (21), கோபிகா (22) மற்றும் இயாஸ் (21) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த காரை ஓட்டிச் சென்ற 19 வந்து சுஹைலை உள்ளூர் மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரில் இருந்த நினவ், அமீர் மற்றும் ஜோயல் ஆகியோர் தப்பிச் சென்ற நிலையில் அவர்களையும் கேரள காவல்துறை கைது செய்தது.
விபத்தை ஏற்படுத்திய இளைஞர், “என் அப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்” என்று திமிராகப் பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இந்த விபத்து வழக்கு தொடர்பாக காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் தகவல்கள் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் முக்கிய குற்றவாளியான சுஹைலின் பெயர் அடையாளம் தெரியாதவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குற்றம் புரிந்தவர்களை சிறையில் அடைக்காமல் சீர்திருத்தப் பள்ளியில் காவலில் வைத்ததற்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவரை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் முடிவை நீதிமன்றமே எடுத்ததாகவும், காவல்துறை எடுக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
இந்த ஏற்பாட்டினால் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார் என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார்.
விசாரணையில் அரசின் எந்தவிதத் தலையீடும் இருக்காது என்றும், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை அரசாங்கம், காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு உறுதி செய்யும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உறுதியளித்தார்.
மேலும் முதல் தகவல் அறிக்கை குறித்தும், அதில் சுஹைல் மதுபோதையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது குறித்த கேள்விக்கும் பதிலளித்த அவர்.,
“ஒரு விபத்து ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட நபர் மது போதையில் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த, அவரது ரத்தத்தை உடனடியாகப் பரிசோதிக்க வேண்டியது அவசியம். மருத்துவச் சான்றிதழ் பெறப்பட வேண்டும், அதன் பின்னரே அந்த உண்மையை பதிவு செய்ய முடியும்.” என தெரிவித்தார்.
உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, ஸ்கூட்டர் மீது மோதியபோது மினி கூப்பர் கார் மணிக்கு 120 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் சென்றுகொண்டிருந்ததாக சுஹைலும் அவனது நண்பர்களும் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
மேலும் சுஹைலும், நினவும் கொச்சி மற்றும் நெடும்பாசேரியில் உள்ள மதுக்கடைகளில் மது அருந்தியதும், பின்னர் நால்வரும் காரில் புறப்படுவதற்கு முன்பும் தொடர்ந்து மது அருந்தியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் தற்போது மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தால்தான் அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது தெரியவரும் என அரசும், காவல்துறையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மக்களே அடித்து காவல்துறையிடம் குற்றவாளி சுஹைலை ஒப்படைத்த நிலையில், அவனின் பெயர் அடையாளம் தெரியாதவர் என கேரள காவல்துறை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.