இந்தியா

இல்லாத அரசு மருத்துவமனைக்கு 100 படுக்கைகள்.. 87 ஊழியர்கள்.. 6 ஆண்டுகளாக ஆவணங்களில் மட்டுமே இயங்கி வந்தது அம்பலம் | Madhya pradesh

கட்டடம் கட்டுவதற்கான நிலம் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரின் கஜ்ரானா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட அரசு பொது மருத்துவமனை ஒன்று கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கி வருவதாக அரசு ஆவணங்களில் உள்ளது.

ஆனால் அங்கு அப்படி ஒரு மருத்துவமனை கட்டிடம் இல்லவே இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த மருத்துவமனைக்காக இதுவரை ஒரு செங்கல் கூட நடப்படவில்லை; அதுமட்டுமன்றி, கட்டடம் கட்டுவதற்கான நிலம் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

பின்னணி

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேச பாஜக அரசு கஜ்ரானா பகுதியில் நவீன மருத்துவமனை ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்தது.

ஆனால், நிலம் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், நிர்வாக ரீதியிலான அரசு ஆவணப் பணிகள் மட்டும் தடையின்றித் தொடர்ந்து நடந்துள்ளன.

மருத்துவமனை கட்டடமே இல்லாத சூழலில், இந்த ஆஸ்பத்திரிக்கு என்று மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட மொத்தம் 87 அரசு பணியிடங்கள் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டு ஆள்சேர்ப்பு நடத்தப்பட்டு பணியிட மாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வந்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இந்த இல்லாத மருத்துவமனைக்காக நியமிக்கப்பட்ட சுமார் 80 ஊழியர்கள், இந்தூரில் உள்ள பிற மருத்துவமனைகளிலும், அரசு திட்டம் கீழ் இயங்கும் சஞ்சீவினி கிளினிக்களிலும் பணியிடமாற்றம் பெற்று வேலை பார்த்து வருகின்றனர்.

விளக்கம்

இப்பிரச்சினை குறித்து விளக்கமளித்துள்ள மத்தியப் பிரதேச துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா,

"ஆரம்பத்தில் இப்பகுதியில் ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. பின்னர் அது 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

அதன்பிறகு, அதனை 100 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனையாக மாற்றத் திட்டம் வகுக்கப்பட்டது.

ஆனால், நகர்புறத்தில் தகுந்த அரசு நிலம் கிடைக்காததால் கட்டடப் பணிகளைத் தொடங்க முடியவில்லை. மருத்துவமனைக் கட்டடம் தயாராகும் வரை, இங்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களின் சேவை வீணாகக் கூடாது என்பதால் அவர்கள் பிற அரசு மருத்துவ நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலம் தேடும் பணி இன்னும் தீவிரமாக நடந்து வருகிறது" என தெரிவித்துள்ளார் .

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் பாஜக் அரசை கேள்வி எழுப்ப திட்டமிட்டு வருகின்றன.