கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டமும் வெடித்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக தரப்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இந்த வழக்கை கையாண்ட விதம் குறித்து பாஜக மற்றும் சிபிஐ மீது பெண்ணின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், விசாரணையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்களைச் சந்திக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் பெண்ணின் தாயாரே இந்த தகவலை தெரிவித்துள்ளார். தனது மகளுக்கு நீதி கிடைக்கவும், மாநிலத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவும், பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக வெளியிட உள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பனிஹாட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் தாயாரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பாஜக இந்த வழக்கை அரசியல்மயமாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது.
பனிஹாட்டியில் திரிணாமுல் காங்கிரஸ், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் நிர்மல் கோஷுக்குப் பதிலாக அவரது மகனும், நகராட்சி உறுப்பினருமான தீர்த்தங்கர் கோஷை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.