மகாராஷ்டிரா அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP-SP) தலைவர் சரத் பவார், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சரத் பவாரின் கட்சி பாஜக-வுக்கு ஆதரவளித்தால் அது மகாராஷ்டிராவின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். பாஜக-வுடன் கைகோர்ப்பது சுயமரியாதையை அடகு வைப்பதற்கு சமம்.
மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆதரவுடன் சரத் பவாரின் கட்சி 8 எம்.பி.க்கள் பெற்றிருக்கும் நிலையில், தற்போது பாஜக-வுக்கு ஆதரவளிப்பது சரியான முடிவல்ல.
மகாத்மா பூலே, சாகு மகாராஜ், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளைப் பேசும் கட்சி, இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது. தொகுதி மறுவரையறை மசோதா ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.