பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தொலைபேசி வாயிலாக இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தார். இந்த உரையாடலில், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பரஸ்பர நலன் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பின் முக்கிய துறைகள் இடம்பெற்றன.
'லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம் 2026' இயற்றப்பட்டதை தொடர்ந்து அதிகரித்துள்ள வர்த்தக பதற்றத்தின் பின்னணியில் இரு தலைவர்களும் பேசினர். இந்த சட்டம், இந்தியா மற்றும் சீனா உட்பட ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க அதிகாரம் அளிக்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் செப்டம்பர் 23 முதல் 25 வரை அமெரிக்காவில் இருந்தார், மேலும் டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் விவாதித்தனர்.
இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை முன்னெடுத்து செல்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். மேலும், இரு நாட்டு மக்களின் நலனுக்காக ஒத்துழைப்பை ஆழப்படுத்த நெருங்கிய ஈடுபாட்டை பேணவும் ஒப்புக்கொண்டனர் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
"வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்," என்று அந்த அறிக்கை கூறியது.
அதிபர் டிரம்புடன் பயனுள்ள உரையாடல் நடத்தியதாக மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் எங்களது இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம்.
எங்களது 'விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை' முன்னெடுத்து செல்ல நெருக்கமான தொடர்பை பேணிக்காக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்று அவர் கூறினார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.