சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில், டெல்லியில் போராடிய இளைஞர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் கடுமையான அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டினார்.
டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் திட்டமிடப்பட்ட போராட்டம் காவல்துறை மூலம் கடுமையாக ஒடுக்கப்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை ஹிட்லரின் காலத்தையே மிஞ்சிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமா கோரிக்கையுடன் நின்றுவிடாமல், பிரதமர் மோடியே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில், டெல்லியில் போராடிய இளைஞர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் கடுமையான அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டினார்.
"மோடிஜி கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத ஆட்சி ஹிட்லரின் எல்லைகளையும் தாண்டிச் சென்றுவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் நடத்தவிருந்த இந்தப் போராட்டத்தைத் தடுக்க, டெல்லி முழுவதும் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. விமான நிலையத்திலேயே CJP தலைவர்களான அபிஜித் தீப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமின்றி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானஜி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபல யூடியூபர் துருவ் ரதி உட்பட 7,000-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டனர்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரை சட்டவிரோதமாகக் காவலில் வைப்பதை கண்டித்தும், இயல்புநிலையை மீட்டெடுக்கக் கோரியும் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், இணையசேவைகள் மற்றும் மெட்ரோ போக்குவரத்தை தடையின்றி இயங்கச் செய்ய உத்தரவிட்டுள்ளது.