மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரமாண்ட திருட்டு என சசி தரூர் வர்ணித்துள்ளார்.
'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' (ஜிடிஏ 6) வீடியோ கேம் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ராக்ஸ்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கேம் பழைய வைஸ் சிட்டி கேம் வரிசையின் தொடர்ச்சி ஆகும்.
ஜிடிஏ 5 வெளியாகி 13 ஆண்டுகளுக்கு பின் வெளியாகியுள்ள ஜிடிஏ 6 அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பல்வேறு அம்சங்கள் இந்த கேமில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இது ஒரு ஓபன் வேர்ல்டு கேம் ஆகும். குற்ற கும்பல்களின் கதைக் களத்தில் கேம் நகர்கிறது.
இந்நிலையில் இந்த கேமை திருவந்தபுர காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விளையாடி மகிழ்ந்துள்ளார்.
அதோடு நில்லாமல் அதனுடன் அரசியல் கருத்தையும் இணைத்து பாஜகவை சாடியுள்ளார் அவர்.
அவரது அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில், தரூர் ஜிடிஏ 6 விளையாடிக்கொண்டே, "கிராண்ட் தெப்ட் ஆட்டோ' என்பதற்கு ஆங்கிலத்தில் எந்த அர்த்தமும் இல்லை. 'கிராண்ட் தெப்ட்' என்பது சரிதான், ஆனால் 'ஆட்டோ' என்றால் என்ன அர்த்தம்?. நான் இதற்கு முன்பு ஒருபோதும் வீடியோ கேம் விளையாடியதில்லை" என்று கூறுகிறார்.
தொடர்ந்து விளையாட்டின் முந்தைய பதிப்பிற்கும் தற்போதைய பதிப்பிற்கும் இடையிலான 13 வருட இடைவெளியை, அதே காலகட்டத்தில் இந்தியா கண்ட மாற்றங்களுடன் சசி தரூர் ஒப்பிட்டார்.
அவர் கூறுகையில், "நிச்சயமாக இந்தியாவில், இந்தக் கடந்த 13 ஆண்டுகள் மிகவும் பரபரப்பானதாக இருந்திருக்கின்றன, இல்லையா?
பல வழிகளில், கருத்துச் சுதந்திரம் குறைவதையும், குரல் எழுப்பினால் அரசு பழிவாங்கக்கூடும் என மக்கள் அதிகம் கவலைப்படுவதையும் நாம் காண்கிறோம்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையைச் சாடிய அவர், "நமது 1,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்து போனதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த 13 ஆண்டுகளில் இந்த நாட்டில் எத்தனையோ நிகழ்வுகள் நடப்பதை நாம் கண்டிருக்கிறோம்" என்றார்.
ஒரு விதத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, Auto இல்லாத Grand Theft (பிரமாண்ட திருட்டு) போன்றது." என்றார்.
இதற்கிடையில், GTA 6 முன்பதிவுகள் மற்றும் முதல் நாள் விற்பனை மூலம் 3.79 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி, வரலாற்றிலேயே மிகப்பெரிய பொழுதுபோக்கு வெளியீடு என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.