இந்தியா

தனித்தனியாக பதிலளிக்க முடியாமல் போனாலும்... X தளத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

அவர்களின் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது...

இந்திய பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி முந்தியுள்ளார்.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் என பலத்தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலக அரசியலில் பல நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் பதிவு:

இந்த நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளிக்க முடியாதது பற்றி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் தனக்கு கிடைத்த வாழ்த்துக்களால் மிகவும் நெகிழ்ந்து போனதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்த பதிவில் அவர், "இன்றும் கடந்த சில நாட்களாகவும், அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்த நல்வாழ்த்துக்களால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். ஒவ்வொரு செய்திக்கும் என்னால் தனித்தனியாகப் பதிலளிக்க முடியாமல் போனாலும், தெரிவிக்கப்பட்ட ஒவ்வொரு வாழ்த்தையும் நான் போற்றி மதிக்கிறேன்.

பாரதத்திற்குச் சேவை செய்யவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்குப் பங்களிக்கவும் கிடைத்த இந்த வாய்ப்பை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன். பல ஆண்டுகளாக, இந்திய மக்கள் ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்காக மீண்டும் மீண்டும் வாக்களித்து வந்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது...." என குறிப்பிட்டுள்ளார்.