வடகிழக்கு மாநிலமான மிசோராமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 46,191 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே 20 அன்று தொடங்கிய இந்தத் எஸ்ஐஆர் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநிலத்தின் இணை தலைமை தேர்தல் அதிகாரி எத்தேல் ரோதாங்புயி வெளியிட்ட தரவுகளின்படி,
மரணமடைந்தவர்கள் 21,290 பேரும், இடம்பெயர்ந்து மிசோரத்தில் வாழ்பவர்கள் 13,992 பேரும், முகவரி அற்றவர்கள் 8,352 பேரும், இரண்டு வாக்காளர் அட்டை கொண்டவர்கள் 2,245 பேரும் என மொத்தம் 46,191 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவை தவிர, தங்களது மத நம்பிக்கைகளின் காரணமாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவோ புதுப்பிக்கவோ 312 பேர் மறுத்துவிட்டதாகத் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திருத்த நடவடிக்கைக்குப் பிறகு, மிசோரம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8,28,877 ஆகக் குறைந்துள்ளது.
2025ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை 8.75 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 4 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4 வரை மக்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்படடும்.
தெற்கு மிசோரமின் சக்மாபழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக மிசோ சிர்லை பால் என்ற மாணவர் அமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது.
அந்தப் பகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 121 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், திடீரென 97 புதிய கிராமங்கள் தேர்தல் பட்டியலில் தோன்றியுள்ளதாகவும் கூறி விரிவான விசாரணை நடத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.