இந்தியா

அகமதாபாத்தில் யோகாசனம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

குஜராத் முழுவதும் ஒட்டுமொத்தமாக 1.25 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் 12-வது சர்வதேச யோகா தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரஹ்லாத் நகர் பூங்காவில் நடைபெற்ற சிறப்பு யோகாசன நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் இணைந்து அவர் பல்வேறு யோகாசனங்களைச் செய்து, யோகா தின விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினம், "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" என்ற முக்கிய கருப்பொருளின் கீழ் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து வயதினரும், குறிப்பாக முதியவர்கள் தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேண யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் என சுமார் 24,000 இடங்களில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வுப் பேரணியில் ஒட்டுமொத்தமாக 1.25 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்துள்ளனர் என்று குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் காந்திநகரின் மான்சா பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா விழாவில் பங்கேற்றார்.

உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் யோகாசனம் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இத்திருநாளில் முன்னின்று யோகாசனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.