மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து என்சிபிசிஆர் அமைப்பு கடந்த ஜூலை 3 ஆம் தேதியன்று விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
சமூக வலைதள ஜாம்பவானான மெட்டா நிறுவனத்தின் தளங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் பரப்பப்படுவது குறித்து டெல்லி காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலையீடு மற்றும் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான விவகாரத்தில் இது மிக முக்கியமான ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து என்சிபிசிஆர் அமைப்பு கடந்த ஜூலை 3 ஆம் தேதியன்று விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்பிறகு மெட்டா நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தைத் தொடர்ந்து, முறையான விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இந்தத் தொடர் ஒழுங்குமுறை அழுத்தங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, மெட்டா நிறுவனம் இந்தியாவில் தனது புகாரளிக்கும் செயல்முறைகளில் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது. இனி இதுபோன்ற குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தீவிர குற்றச் சம்பவங்கள் மற்றும் விவகாரங்களை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திற்கு புகாராகத் தெரிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.