குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம்.. சிறப்பு பிரிவு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

குடும்பத் தொழில்களில் குழந்தைகள் வேலை செய்ய வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகளின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியிருந்தது.
குழந்தை தொழிலாளர்
Published on: 
Summary

2016 குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்தின் விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, சிறப்புப் பிரிவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டின் அசல் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை திருத்தி, குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2016 அமலுக்கு வந்தது.

இது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான வேலைவாய்ப்புகளிலும் செயல்முறைகளிலும் பணியமர்த்துவதை முற்றிலுமாக தடை செய்கிறது.

மேலும் இதன் விதிகள் அபாயகரமான தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடைசெய்கிறது.

குடும்பத் தொழில்

'ஹெல்த் ஃபார் மில்லியன்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வி.என். பட்டி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ஹெல்த் ஃபார் மில்லியன்ஸ் அமைப்பு 2009ஆம் ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், 1986 சட்டத்தில் குடும்பத் தொழில்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகள் வேலை செய்ய வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகளின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியிருந்தது.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான சட்டத்தில் இருந்த விதிவிலக்குகளை நீக்கக் கோரியும், உழைக்கும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மதிய உணவு வசதிகளை வழங்கக் கோரியும் வலியுறுத்தியிருந்தது.

உச்சநீதிமன்றம்

ஏற்கனவே 2016 கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தில் இந்த பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் சட்ட விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, சிறப்புப் பிரிவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டத்தின் விதிகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மூலம் அமலாக்க முகமைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் ஒரு சிறப்புப் பிரிவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

X